

விக்கிரவாண்டி;
விக்கிரவாண்டி கடைவீதியில் மழைநீர் வடிகால் வாய்க்கால் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று காலை 9 மணிக்கு மின்தடை ஏற்படுத்தி, மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி நடைபெற்றது. இரவு 8 மணியை கடந்தும் பணி முடியாததால் மின் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள், பணி எப்போது முடியும், எத்தனை மணிக்கு மின்வினியோகம் செய்வீர்கள் என்று மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டனர். அதற்கு அதிகாரிகள், இன்னும் 2 மணி நேரம் ஆகும் என்று கூறினர். மின்வாரிய அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் திட்டமிட்டு பணியை மேற்கொள்ளாததாலும், குறைந்த பணியாளர்களை கொண்டு பணி செய்வதாலும் பணியை முடிப்பதில் காலதாமதம் ஏற்படுவதாகவும், உடனடியாக மின் வினியோகம் செய்யக்கோரியும் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மறியலிலும் ஈடுபட முயன்றனர். இது பற்றி அறிந்ததும் விக்கிரவாண்டி போலீசார் மற்றும் பேரூராட்சி தலைவர் அப்துல் சலாம் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மின்வாரிய அதிகாரிகள் விரைந்து பணிகளை முடித்து மின் வினியோகம் செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இருப்பினும் இரவு 9.30 மணி வரை மின் சாரம் வினியோகிக்காததால் வியாபாரிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.