கோவையில் ஆட்டோவில் கடத்திய 12 கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல்: 2 பேருக்கு வலைவீச்சு

கோவையில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவையில் ஆட்டோவில் கடத்திய 12 கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல்: 2 பேருக்கு வலைவீச்சு
Published on

கோவை,

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 23-ந் தேதி நடைபெறுகிறது. இதற்காக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் கொண்டு சென்றால் அவற்றை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பறக்கும்படை போலீசார் துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு ஆட்டோ வந்தது. அந்த ஆட்டோவை பறக்கும்படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அந்த ஆட்டோ நின்றதும், அதற்குள் இருந்த 2 பேர் திடீரென்று இறங்கி ஓடினர். உடனே அங்கு இருந்த போலீசார் அந்த 2 பேரை துரத்தினர். இருந்த போதிலும் அந்த 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

பின்னர் அதிகாரிகள் அந்த ஆட்டோவில் சோதனை நடத்தினர். அப் போது அங்கு ஒரு மூட்டை இருந்தது. அந்த மூட்டையை அதிகாரிகள் பிரித்து பார்த்தபோது, அதற்குள் பண்டல் பண்டலாக 12 கிலோ உயர்ரக கஞ்சா இருந்தது. அந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை துடியலூர் போலீசில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

துடியலூரில் இருந்து பெரியநாயக்கன்பாளையம் நோக்கி சென்ற அந்த ஆட்டோவில் கஞ்சா கடத்திய நபர்கள் யார் என்பது தெரியவில்லை. அவர்கள் ஆட்டோ டிரைவரிடம் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கி செல்வதாக தெரிவித்து உள்ளனர். அந்த 2 பேரும் தமிழில்தான் பேசி உள்ளனர்.

எனவே அவர்கள் கோவையை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனவே அந்த நபர்கள் யார்? எந்த பகுதியில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.3 லட்சத்துக்கும் மேல் இருக்கும். அத்துடன் தலைமறைவான அந்த 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com