

சென்னை,
கொரோனா காரணமாக கடந்த மாதம் (ஆகஸ்டு) 17-ந்தேதி முதல் பள்ளி மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. பிளஸ்-1 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கடந்த மாதம் 24-ந்தேதி முதல் தொடங்கியது. சேர்க்கை தொடங்கிய முதல் 2 நாட்களிலேயே சுமார் 2 லட்சத்துக்கும் மேல் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்ந்து இருந்தனர். அதன் தொடர்ச்சியாகவும் மாணவர் சேர்க்கை பள்ளிகளில் தீவிரமாக நடந்து வருகிறது.
அந்த வகையில் கடந்த 3 வாரத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையில் சுமார் 12 லட்சத்து 88 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இவற்றில் 1-ம் வகுப்பில் மட்டும் கிட்டத்தட்ட 2 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் சேர்ந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மாணவர் சேர்க்கை பள்ளிகளில் இந்த மாதம் இறுதி வரை நீடிக்கும் என்றே சொல்லப்படுகிறது. அந்த வகையில் பார்க்கும்போது அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.