கும்மிடிப்பூண்டியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.12 லட்சம் திருட்டு - 2 தனிப்படைகள் அமைப்பு

கொள்ளையடிப்பதற்கு முன் கண்காணிப்பு கேமரா மீது ஸ்பிரே அடித்து மறைத்துள்ளனர்
ஆக்ஸிஸ் வங்கி ஏடிஎம்
Published on

திருவள்ளூர்,

கும்மிடிப்பூண்டியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.12 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியை அடுத்து பைபாஸ் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தில் ஆக்ஸிஸ் வங்கியின் ஏடிஎம் மையம் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் ஏடிஎம் மையம் உள்ளது. நேற்று முன்தினம் ஆக்ஸிஸ் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.12 லட்சம் போடப்பட்டதாக கூறப்படுகிறது.

நேற்று நள்ளிரவு ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் அப்பகுதி வழியே வந்த மர்ம நபர்கள், ஆக்சிஸ் வங்கி ஏடிஎம் மையம் சென்று கையில் வைத்த ஸ்பிரே மூலமாக அங்கிருந்த கண்காணிப்பு கேமரா மீது அடித்துள்ளனர். பின்னர், ஏடிஎம் இயந்திரத்தை வெல்டிங் கட்டரால் உடைத்து அதிலிருந்த ரூ.12 லட்சம் பணத்தை திருடி சென்றுள்ளனர். இந்தியன் வங்கி ஏடிஎம் இயந்திரத்தையும் உடைக்க முயன்றுள்ளனர். ஆனால், பொதுமக்கள் நடமாட்டம் இருந்ததால் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், திருவள்ளூர் டிஎஸ்பி தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.12 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கும்மிடிப்பூண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com