12 மாத கால மகப்பேறு விடுப்பு: ரேசன் கடை ஊழியர்களுக்கும் பொருந்தும் - தமிழக அரசு உத்தரவு

அரசுப் பெண் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் 12 மாத கால மகப்பேறு விடுப்பு ரேசன் கடை ஊழியர்களுக்கும் பொருந்தும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
12 மாத கால மகப்பேறு விடுப்பு: ரேசன் கடை ஊழியர்களுக்கும் பொருந்தும் - தமிழக அரசு உத்தரவு
Published on

சென்னை,

அரசுப் பெண் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் 12 மாத கால மகப்பேறு விடுப்பு, ரேசன் கடை பெண் ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.சண்முக சுந்தரம், அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ரேசன் கடைகளில் பணியாற்றும் பெண் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு 270 நாட்கள் மகப்பேறு விடுப்பு பொருந்தும் என்றும் அதற்கேற்ற வகையில் சிறப்புத் துணை விதிகளில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றும் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டில் பதிவாளர் கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில் 23.8.2021 அன்று வெளியிடப்பட்ட அரசாணையில், அரசுப் பெண் பணியாளர்களின் மகப்பேறு விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தி, அதாவது 270 நாட்களில் இருந்து 365 நாட்களாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது.

அரசுப் பணியாளர்களுக்கு அரசால் அறிவிக்கப்படும் மகப்பேறு விடுப்பு குறித்த சலுகைகள், கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் பெண் பணியாளர்களுக்கும் பொருந்தும் என்று பதிவாளர் ஏற்கனவே அறிவித்துள்ளார். அதன்படி, ரேசன் கடைகளில் பணியாற்றும் பெண் பணியாளர்களுக்கும் 12 மாதங்கள் (365 நாட்கள்) மகப்பேறு விடுப்பு பொருந்தும்.

எனவே அதற்கான சிறப்புத் துணை விதிகளில் திருத்தம் மேற்கொண்டு, தகுதியுள்ள பெண் பணியாளர்களுக்கு இந்த விடுப்பை அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரேசன் கடை பெண் ஊழியர்கள் 12 மாத விடுப்பை அனுமதிக்காமல், 6 மாதங்கள் மட்டுமே விடுப்பு வழங்கப்படுவதாகவும், 6 மாதங்களுக்கு மேலாக எடுக்கப்பட்ட விடுப்புக்கு ஏற்ப சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதாகவும் வரும் தகவல்கள் வருத்தமளிக்கின்றன. இதுபோன்ற புகார்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com