நடுரோட்டில் சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்தது 12 பயணிகள் படுகாயம்

நடுரோட்டில் சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்து எலும்புக்கூடானது. இந்த விபத்தில் 12 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
நடுரோட்டில் சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்தது 12 பயணிகள் படுகாயம்
Published on

மேட்டூர்,

கோவையில் இருந்து பெங்களூருவுக்கு நேற்று முன்தினம் இரவு சொகுசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பஸ்சை டிரைவர் ராஜன் (வயது 35) என்பவர் ஓட்டினார். 44 பேர் பயணம் செய்தனா.

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே புதுச்சாம்பள்ளி என்ற இடத்தில் நள்ளிரவு 1.15 மணியளவில் பஸ் சென்றது. அப்போது திடீரென பஸ்சின் பின்பகுதியில் இருந்து புகை கிளம்பியது. பின்னர் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த டிரைவர், அந்த பஸ்சை உடனடியாக நிறுத்தி விட்டு கீழே இறங்கினார்.

இதைத்தொடர்ந்து அலறியடித்தபடி பஸ்சில் இருந்து பயணிகள் முன்பக்க வாசல் வழியாக இறங்கினர். ஒரே வாசல் என்பதால் வாசலில் பயணிகள் முண்டியடித்தப்படி இறங்கினர். ஒரு சிலர் ஜன்னல் வழியாக குதித்து தப்பினர். குறிப்பாக பயணிகள் தங்கள் உடைமைகள், மடிக்கணினி போன்றவற்றை பஸ்சில் விட்டு, விட்டு உயிர் பிழைத்தால் போதும் என்று இறங்கினர்.

12 பேர் படுகாயம்

பஸ்சில் இருந்து பயணிகள் கீழே இறங்கி ஓடிய அடுத்த சில நிமிடங்களில் பஸ் மளமளவென பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும், மேட்டூர் தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் கருமலைக்கூடல் போலீசார் அங்கு விரைந்து வந்து பஸ்சில் பற்றி எரிந்த தீயை சுமார் ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர்.

இருப்பினும் பஸ் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடானது. அதே நேரத்தில் பஸ்சில் பயணம் செய்த, தாமோதரன் (33), அவருடைய மனைவி வினோதினி (30), சந்தோஷ் (28), அவருடைய மனைவி கலையரசி (26), நாகராஜ் (26), சத்தியமங்கலத்தை சேர்ந்த நாகராஜ் (36), மித்ரா (21), சீனிவாசன் (32), ஜான்நெஸ்தன் சதீஷ் (31), அனுஷா (22), மிதுனா மேனன் (33), அனுக்கிருஷ்ணா (24) ஆகிய 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

அவர்கள் அனைவரும் மேட்டூர்அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com