எரிவாயு தகன மேடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த 12 பேர் கைது

கும்மிடிப்பூண்டி அருகே எரிவாயு தகன எரிமேடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது அரசு பணிகளை தடுத்து நிறுத்தியதாக வழக்கு பதிவு செய்த போலீசார், 12 பேரை கைது செய்தனர்.
எரிவாயு தகன மேடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த 12 பேர் கைது
Published on

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியின் 15 வார்டான மேட்டுகாலனி பகுதியில் உள்ள ஜெயஸ்ரீநகரில் ரூ.1 கோடியே 36 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் எல்.பி.ஜி. எரிவாயு தகன மேடை அமைப்பதற்கு தீர்மானம் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டு அதற்கான பணிகள் பேரூராட்சி நிர்வாகத்தால் அந்த பகுதியில் உள்ள சுடுகாட்டில் தற்போது தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பல தலைமுறையாக ஒரு சமூகத்தினரின் பயன்பாட்டில் மட்டுமே இருந்து வரும் சுடுகாட்டில் தற்போது பொது எரிவாயு தகன மேடை அமைக்க அந்த சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே பல கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளனர்.

இதை தொடர்ந்து கடந்த 15-ந் தேதி மேற்கண்ட சுடுகாட்டில் எரிவாயு தகன மேடை அமைக்கும் பணியை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேரூராட்சி நிர்வாகத்தினர், செயல் அலுவலர் யமுனா தலைமையில் தொடங்கினர். அதற்கு அந்த பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக அரசு அதிகாரிகளை வேலை செய்யவிடாமல் சிலர் தடுத்ததாக கிராம நிர்வாக அதிகாரி அருள் கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்திருந்தார். இதனையடுத்து இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார், அரசு பணியை செய்யவிடாமல் தடுத்தது உள்பட 3 பிரிவுகளில் கீழ் 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் 12 பேரை கும்மிடிப்பூண்டி போலீசார் நேற்று கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com