120 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்கள்

திருவாரூர் புலிவலத்தில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் 120 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார்.
120 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்கள்
Published on

திருவாரூர் புலிவலத்தில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் 120 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார்.

சமுதாய வளைகாப்பு விழா

திருவாரூர் ஒன்றியம் புலிவலம் ஊராட்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார். இதில் பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் கலந்துகொணடனர்.

பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

ஒரு குழந்தையின் வளர்ச்சி, கருவாக உருவான நாளிலிருந்தே ஆரம்பமாகிறது. இதனை மனதில் கொண்டு கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால் தான் அவர்களுக்கு பிறக்கும் குழந்தை ஆரோக்கியமான, அறிவான குழந்தையாக இருக்கும் என்பதற்காக வளைகாப்பு ஏற்படுத்த அறிவியல் பூர்வமான நிகழ்ச்சி தான் இந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியாகும்.

பரிசோதனைக்கு தவறாது செல்ல வேண்டும்

வசதி வாய்ப்பு குறைவால் இந்த நிகழ்ச்சியை நடத்த முடியாத குடும்பத்தில் குழந்தைகள் பாதிக்கப்பட கூடாது என்ற தொலைநோக்கு பார்வையுடன் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பான திட்டம் இந்த வளைகாப்பு திட்டமாகும். மேலும் உங்களுக்கு வழங்கப்படும் சத்துமாவு போன்ற ஊட்டச்சத்து நிறைந்துள்ள பொருட்கள் வழங்குவதை நீங்கள் உங்கள் ஆரோக்கியத்திற்காகவும், குழந்தையின் வளர்ச்சியாகவும் நீங்கள் சாப்பிட வேண்டும்.

இந்த நேரத்தில் நீங்கள் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும். எந்தவித துன்பங்களையும் நீங்கள் நினைத்து வருத்தப்படக்கூடாது. அங்கான்வாடி மையங்களுக்கும், சுகாதார மையத்திற்கும் பரிசோதனைக்கு ஒவ்வொரு மாதமும் தவறாது செல்ல வேண்டும். 2 குழந்தைக்கு மேல் செல்லாமல் நாம் இருவர், நமக்கு இருவர் என்ற கோட்பாட்டினை கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சீர்வரிசை பொருட்கள்

முன்னதாக 120 கர்ப்பிணிகளுக்கு மஞ்சள், குங்குமம் செட், வெற்றிலை பாக்கு, பழங்கள், புடவை, சிவப்பு அவல், பேரீச்சை பழம் உள்ளிட்ட 11 வகையான சீர்வரிசை பொருட்களை கலெக்டர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் திருவாரூர் ஒன்றியக்குழு தலைவர் புலிவலம் தேவா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வேதநாயகி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) லதா, ஒன்றியக்குழு உறுப்பினர் தவுலாத் இக்பால், வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்ரமணியன், ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்து, துணைத்தலைவர் கார்த்தி, ஊராட்சி செயலர் தங்கதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com