தூத்துக்குடி மாவட்டத்தில் 121 வேட்புமனுக்கள் ஏற்பு; 67 மனுக்கள் தள்ளுபடி

வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான காலக்கெடு முடிந்தவுடன், ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல், அவர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு குறித்த விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிடும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 121 வேட்புமனுக்கள் ஏற்பு; 67 மனுக்கள் தள்ளுபடி
Published on

தூத்துக்குடி,

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான கூர்ந்தாய்வு (பரிசீலனை) நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மொத்தம் பெறப்பட்ட 188 மனுக்களில் 121 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன; 67 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

மாவட்டம் முழுவதும் மார்ச் 30 முதல் ஏப்ரல் 6 வரை வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. நேற்று அந்தந்தத் தொகுதி தலைநகரங்களில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில், அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுப் பார்வையாளர்கள் முன்னிலையில் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன.

தொகுதி வாரியான நிலவரம்:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 28 வேட்பு மனுக்களில் 18 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன; 10 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 33 வேட்பு மனுக்களில் 27 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன; 6 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 35 வேட்பு மனுக்களில் 14 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன; 21 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 28 வேட்பு மனுக்களில் 18 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன; 10 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 28 வேட்பு மனுக்களில் 21 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன; 7 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 36 வேட்பு மனுக்களில் 23 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன; 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு தூத்துக்குடி மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட மொத்த வேட்பு மனுக்கள் 188-ல் 121 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன; 67 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

திரும்பப் பெற காலக்கெடு:

மனுக்கள் பரிசீலனைக்குப் பிறகு தற்போது 121 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர். தங்களது வேட்புமனுக்களைத் திரும்பப் பெற விரும்பும் வேட்பாளர்கள், இன்று (புதன்கிழமை) மற்றும் நாளை (வியாழக்கிழமை) அலுவலக நேரத்திற்குள் தங்களது மனுக்களை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மாலை வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு முடிந்தவுடன், ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் அவர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு குறித்த விபரங்களைத் தேர்தல் ஆணையம் வெளியிடும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com