123-வது பிறந்தநாள்: காயிதே மில்லத் நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை

காயிதே மில்லத் 123-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் மரியாதை செலுத்தினர்.
123-வது பிறந்தநாள்: காயிதே மில்லத் நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை
Published on

சென்னை,

காயிதே மில்லத் 123-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில், தமிழக அரசு சார்பில் நேற்று மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் காயிதே மில்லத் நினைவிடத்தில் மலர் போர்வை போர்த்தி, மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவர்களுடன் அரசு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனும் மரியாதை செலுத்தினார்.

கே.ஏ.செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, தங்கமணி, டி.ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன், கடம்பூர் ராஜூ, பாண்டியராஜன், ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர், பென்ஜமின், எம்.சி.சம்பத், நிலோபர் கபில் உள்பட அமைச்சர்கள், வக்பு வாரிய தலைவர் அன்வர் ராஜா, அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், டாக்டர் ஜெ.ஜெயவர்தன் உள்பட எம்.பி.கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாநில-மாவட்ட நிர்வாகிகள் என ஏராளமானோர் காயிதே மில்லத் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

தி.மு.க. சார்பில் கட்சியின் செயல் தலைவரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் காயிதே மில்லத் நினைவிடத்தில் மலர் போர்வை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பி.கே.சேகர்பாபு, ஜெ.அன்பழகன், தொகுதி செயலாளர் எஸ்.மதன்மோகன் உள்பட ஏராளமான நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.

அவருடன் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் மற்றும் நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com