கஜா புயலால் 125 கிராமங்கள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன; அமைச்சர் ஜெயக்குமார்

கஜா புயலால் 125 கிராமங்கள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
கஜா புயலால் 125 கிராமங்கள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன; அமைச்சர் ஜெயக்குமார்
Published on

சென்னை,

தமிழகத்தில் கடந்த 16ந்தேதி டெல்டா பகுதியில் உள்ள 12 மாவட்டங்களில் கஜா புயல் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது. இதில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்கள் கடும் பாதிப்படைந்தன.

கஜா புயலின் தாக்குதலால் பல லட்சம் தென்னை, பலா மற்றும் பழமையான மரங்கள் வேரோடு சாய்ந்தன. வாழை, கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களும் நாசமானது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. மேலும் மின்மாற்றிகள், துணை மின் நிலையங்களிலும் பெரும் சேதம் ஏற்பட்டது.

ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடு மற்றும் உடைமைகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர். இதேபோன்று மீனவர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்து உள்ளது. அவர்களின் நாட்டு படகுகள், இயந்திர படகுகள் போன்றவை சேதமடைந்து உள்ளன.

இந்த நிலையில், சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் கஜா புயல் இழப்பீடு பற்றி செய்தியாளர்களிடம் இன்று விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறும்பொழுது, கஜா புயலால் 125 கிராமங்கள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன.

877 நாட்டு படகுகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன. அவற்றுக்கு தலா ரூ.85 ஆயிரம் வரை வழங்க வழியுள்ளது. மீனவர்கள் நலனுக்காக ரூ.1,300 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள் வழங்குவதற்காக கூடுதல் நிதி ஒதுக்குவது பற்றி ஆலோசிக்கப்படும். மீனவர்களின் நிவாரண நிதி கோரிக்கைகள் பற்றியும் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என கூறினார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள் வாங்குவதற்கான வழிகள் குறித்து ஆய்வு செய்யப்படும். இயந்திர படகுகளின் சேதத்துக்கு ரூ.3 லட்சம் வரை இழப்பீடு வழங்கினால் பழுது பார்க்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com