மினி வேனில் கடத்தப்பட்ட 1,250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

கோவில்பட்டியில் 1,250 கிலோ ரேஷன் அரிசியைத் தனிப்படை போலீசார் நேற்று அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.
மினி வேனில் கடத்தப்பட்ட 1,250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மினி வேனில் கடத்திச் செல்லப்பட்ட 1,250 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர்.

கோவில்பட்டி வேலாயுதபுரம் பகுதியில் இருந்து ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில் தனிப்படை பிரிவு உதவி ஆய்வாளர் மணிமாறன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த மினி வேனை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 25 மூட்டைகளில் தலா 50 கிலோ வீதம் மொத்தம் 1,250 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக வேலாயுதபுரம் 2-வது தெருவைச் சேர்ந்த காமராஜ் (65) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மினி வேனை உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

மேலும், இந்த ரேஷன் அரிசி எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்து உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com