சரக்கு ரெயிலில் 1,287 மெட்ரிக் டன் உர மூட்டைகள் வந்தன

தூத்துக்குடியில் இருந்து புதுக்கோட்டைக்கு சரக்கு ரெயிலில் 1,287 மெட்ரிக் டன் உர மூட்டைகள் வந்தன.
சரக்கு ரெயிலில் 1,287 மெட்ரிக் டன் உர மூட்டைகள் வந்தன
Published on

உர மூட்டைகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பா சாகுபடிக்கும், ஏற்கனவே பயிரிட்டுள்ள மக்காச்சோளம், நிலக்கடலை, உளுந்து, தென்னை, கரும்பு மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் ஆகிய பயிர்களுக்கும் தேவையான உரங்களான யூரியா 4,598 மெட்ரிக் டன்கள், டி.ஏ.பி. 1,596 மெட்ரிக் டன்கள், பொட்டாஷ் 1,476 மெட்ரிக் டன்கள், காம்ப்ளக்ஸ் 5,667 மெட்ரிக் டன்கள் ஆகியவை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் தனியார் சில்லறை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மாவட்டத்திற்கு தேவையான உர வினியோகத் திட்ட இலக்கீட்டின்படி உர நிறுவனங்களிடமிருந்து உரங்கள் பெறப்படுவதற்கு தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்கள் தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரெயிலில் 21 வேகன்களில் இன்று புதுக்கோட்டைக்கு வந்தன.

விதிகளை மீறினால் நடவடிக்கை

இதில் யூரியா உரம் 785.7 மெட்ரிக் டன்களும், டி.ஏ.பி. உரம் 252.25 மெட்ரிக் டன்களும், காம்ப்ளக்ஸ் உரம் 249.3 மெட்ரிக் டன்களும் என மொத்தம் 1,287.25 மெட்ரிக் டன் உர மூட்டைகள் வந்தன. இந்த உர மூட்டைகள் அனைத்தும் தனியார் நிறுவனத்திற்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த உரங்கள், அனுப்பி வைக்கப்படுவதை வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது புதுக்கோட்டை மாவட்ட தரக்கட்டுப்பாடு வேளாண்மை உதவி இயக்குனர் மதியழகன், வேளாண்மை அலுவலர் முகமது ரபி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். மேலும், மாவட்டத்தில் உர விற்பனை மற்றும் உர நகர்வு குறித்து சிறப்பு பறக்கும்படை மூலம் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதனால், உர விற்பனையாளர்கள் விதி மீறல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com