

விருதுநகர்,
வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 12-ம் வகுப்பு மாணவி பலியானார். அவரது தாயும் பலத்த காயமடைந்தார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் மேட்டமலை பகுதியில் நேற்று மாலை கனமழை பெய்தது. இப்பகுதியில் உள்ள பழமையான வீடு ஒன்றில் செல்வம் - சோலையம்மாள் தம்பதியினர் தங்களது குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் முத்துசெல்வி ( வயது 17), சின்னக்காமன்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், நள்ளிரவில் குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, கனமழை காரணமாக வீட்டின் நடுப்பகுதி பக்கவாட்டு சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அங்கு தூங்கிக் கொண்டிருந்த மாணவி முத்துசெல்வி இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்தார். மேலும், அவரது தாய் சோலையம்மாளின் காலில் சுவர் விழுந்ததில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், இடிபாடுகளில் சிக்கியிருந்த இருவரையும் மீட்டு, ஆட்டோ மூலம் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மாணவி முத்துசெல்வி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தாய் சோலையம்மாளுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த சாத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.