

கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் அம்மன் நகரில் உள்ள மாட்டுத் தீவனத் தொழிற்சாலையில் பணிபுரியும் 13 வடமாநில தொழிலாளர்கள், பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மந்திகிரி பகுதியில் உள்ள மாவட்ட கால்நடை பண்ணை வளாகம் மற்றும் அதனை ஒட்டிய தின்னூர், அம்மன் நகர் பகுதிகளில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தங்கிப் பணிபுரிந்து வருகின்றனர். இங்குள்ள மாட்டுத் தீவனத் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) தொழிலாளர்களுக்கு சாதம், சாம்பார் மற்றும் சப்பாத்தி ஆகிய உணவு வழங்கப்பட்டது. அந்த உணவில் பல்லி விழுந்துள்ளது.
அதனைக் கவனிக்காமல் உணவை உட்கொண்ட 13 வடமாநில தொழிலாளர்களுக்கு சிறிது நேரத்திலேயே கடுமையான வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு நிலைகுலைந்தனர். இதனைக் கண்ட சக தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகத்தினர், பாதிக்கப்பட்ட 13 பேரையும் உடனடியாக மீட்டு ஒசூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உணவின் தரத்திலும் சுகாதாரத்திலும் காட்டப்பட்ட அலட்சியமே இந்த சம்பவத்திற்குக் காரணமாகும்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மந்திகிரி காவல் நிலைய போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சமையலறையில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவு மாதிரிகளைச் சேகரித்துப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ள போலீசார், உணவு விநியோகித்த ஒப்பந்ததாரரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.