

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை நடுக்கூட்டுடன்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மனைவி மந்திரமுத்து (வயது 57). இவர் சொக்கலிங்கபுரம் கிராமத்தில் புதிய வீடு கட்டி வருகிறார். நேற்று மதியம், தனது அண்ணன் கருப்பசாமியுடன்(66) மோட்டார் சைக்கிளில் கட்டுமானப் பணிகளைப் பார்வையிடச் சென்றார்.
உமரிக்கோட்டை சாலை பாலம் அருகே சென்றபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், மந்திரமுத்துவின் பைக் மீது மோதி அவர்களைக் கீழே தள்ளினர். பின்னர் மந்திரமுத்து கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தாலிச் சங்கிலி மற்றும் 6 சவரன் சங்கிலி என மொத்தம் 13 சவரன் நகைகளைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். இந்த நகைகளின் மதிப்பு ரூ.12 லட்சம் ஆகும்.
இதுகுறித்து மந்திரமுத்து அளித்த புகாரின் பேரில், தட்டப்பாறை இன்ஸ்பெக்டர் ஸ்டெல்லாபாய் வழக்குப்பதிவு செய்தார். தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் உத்தரவின்பேரில், ரூரல் டி.எஸ்.பி. சுதீர் ஆலோசனையின்படி தனிப்படை அமைக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் மற்றும் தனிப்படை காவலர் பொன்பாண்டி தலைமையிலான குழுவினர், அந்தச் சாலையில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில் நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் மேலத்தட்டாப்பாறை கிராமத்தைச் சேர்ந்த ஹரிராமதுரை மகன் தளவாய்ராஜ்(33) மற்றும் பேச்சிமுத்து மகன் முருகன்(33) என்பது உறுதியானது. உடனடியாக 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 13 சவரன் நகைகளையும் மீட்டனர்.
இவர்கள் மீது வேறு ஏதேனும் வழக்குகள் நிலுவையில் உள்ளனவா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவம் நடந்த 3 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளைக் கைது செய்த சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் மற்றும் தனிப்படை காவலர் பொன்பாண்டி ஆகியோரை எஸ்.பி. மதன் நேரில் அழைத்து பாராட்டினார்.