

சென்னை,
சென்னையில் பைக் ரேஸ் மற்றும் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, நகரில் 13 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் 2 நாட்களுக்கு முன்பு கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கோட்டூர்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நேரத்தில் 60-க்கும் மேற்பட்ட ‘பைக் ரேஸ் ரோமியோக்கள்’ அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.
கோட்டூர்புரத்தில் மின்னல் வேகத்தில் சென்ற இருசக்கர வாகனம் ஒன்று மேம்பால தடுப்புச்சுவரில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மெக்கானிக் ஸ்ரீகுகன் உயிரிழந்தார். இந்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, பைக் ரேசில் ஈடுபட்டதாக கூறப்படும் 16 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், பைக் ரேஸ் மற்றும் அதிவேக வாகன ஓட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதன்படி, சென்னையில் 13 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தனிப்படையிலும் உதவி ஆய்வாளர் தலைமையில் 4 போலீசார் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் பைக் ரேஸ் நடைபெறும் இடங்கள், முக்கிய சாலைகள் மற்றும் விபத்து ஏற்படக்கூடிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.
குறிப்பாக, தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை தனிப்படையினர் ரோந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். பைக் ரேசில் ஈடுபடுபவர்கள் மற்றும் ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டுபவர்களை கண்காணித்து, விதிமீறலில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.