திருப்பூர் பனியன் நிறுவனத்தில் கொத்தடிமைகளாக வேலை பார்த்த 13 பேர் மீட்பு

7 ஆண்கள், 6 பெண்கள் உள்பட 13 பேரை அதிகாரிகள் மீட்டனர்.
திருப்பூர் பனியன் நிறுவனத்தில் கொத்தடிமைகளாக வேலை பார்த்த 13 பேர் மீட்பு
Published on: 

திருப்பூர்,

திருப்பூரில் உள்ள தனியார் பனியன் நிறுவனங்களில் ஏராளமான வெளிமாநில, வெளியூர் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் சில நிறுவனங்களில் சிறுவர்களையும் பணியமர்த்தி வேலை வாங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்னர்.

இதனிடையே திருப்பூர் கொடிக் கம்பம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பனியன் நிறுவனத்தில் சிறுவர்களையும், தொழிலாளர்களையும் கொத்தடிமைகளாக வேலைவாங்கி வருவதாக சைல்டு லைன் மற்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக அவர்கள் தொழிலாளர் துறை மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து திருப்பூர் ஆர்.டி.ஓ. சிவப்பிரகாஷ், தாசில்தார் கோவிந்தசாமி மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினார்கள்.அப்போது அங்கு 13 பேர் கொத்தடிமை தொழிலாளர்களாக பணிபுரிந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர்களில் 4 பேர் சிறுவர்கள் என்பது தெரியவந்தது. இதனால் அவர்கள் குறித்த விவரங்களை அதிகாரிகள் சேகரித்தனர்.

அவர்கள் தமிழகத்தின் தூத்துக்குடி, தேனி, கிருஷ்ணகிரி, தர் மபுரி, சேலம், ஈரோடு பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. வீட்டில் பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு திருப்பூருக்கு வருபர்களை சிலர் பஸ் நிலையத்திலேயே மடக்கி இந்த பனியன் நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்ததும் தெரியவந்தது. அந்த தொழிலாளர்களிடம் குறைந்த சம்பளம் வழங்கி வேலைவாங்கியதும், பனியன் நிறுவனத்துக்கு சொத்தமான இடத்திலேயே வெளித்தொடர்பு இல்லாமல் தங்கவைத்து வேலைவாங்கியதும் விசாரணையில் தெரியவந்தது.

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் கொத்தடிமைகாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அங்கு தங்கியிருந்த 7 ஆண்கள், 6 பெண்கள் உள்பட 13 பேரை அதிகாரிகள் மீட்டனர். அவர்களை திருப்பூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு அழைத்து வந்து அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அவர்கள் மீட்கப்பட்ட தகவல் அவர்களது பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களது பெற்றோர் வந்ததும் கலெக்டரின் அனுமதியுடன் அவர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்களை கொத்தடிமைகளாக வைத்து வேலை வாங்கிய பனியன் நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com