சென்னையில் ஒரே நாளில் 1,309 மின்னணுக் கழிவுகள் சேகரிப்பு!

சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் முறையாக மறுசுழற்சி செய்யும் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மின்னணுக் கழிவு
Published on: 

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் வீடுதோறும் மின்னணுக் கழிவுகள் சேகரிக்கும் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. இதில் பழைய கைப்பேசிகள், கணினிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள் உள்ளிட்ட மொத்தம் 1,309 மின்னணு மற்றும் மின்சாதனக் கழிவுகள் பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்பட்டன.

மின்னணுக் கழிவுகள்

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

இந்திய அரசால், மின்னணுக் கழிவுகளைத் திறம்படச் சேகரித்தல், தரம் பிரித்தல் மற்றும் முறையாக அகற்றுதல் ஆகியவற்றை உறுதி செய்வதற்கும், இது தொடர்பான நடவடிக்கைகளை உரிய முறையில் ஒருங்கிணைப்பதற்கும், சிறப்பு இயக்கம் 6.0 என்ற முன்னெடுப்பினை அனைத்து ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளும் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், இன்று, மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்கள் மூலம் வீடுகள் தோறும் சென்று மின்னணுக் கழிவுகளைப் பாதுகாப்பான முறையில் சேகரித்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் மறுசுழற்சி செய்வதை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு சேகரிப்பு முகாம் நடைபெற்றது.

மாநகராட்சி

மேலும், மின்னணுக் கழிவுகளை வீட்டுக் குப்பைகளுடன் கலக்காமல் தனியாகப் பிரித்து, மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் தங்களிடம் பயன்படுத்தப்படாமல் உள்ள அல்லது பழுதடைந்த மின்னணு மற்றும் மின்சாதனக் கழிவுகளான 3 பழைய கைப்பேசிகள், 38 கணினிகள், 11 மடிக்கணினிகள், 82 விசைப்பலகைகள், 361 தொலைக்காட்சிப் பெட்டிகள், 34 மின்விசிறிகள் மற்றும் 780 இதர மின்னணுச் சாதனங்கள் என மொத்தம் 1,309 மின்னணு மற்றும் மின்சாதனக் கழிவுகளை, இன்று நடைபெற்ற சிறப்புச் சேகரிப்பு இயக்கத்தின்போது மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைத்தனர்.

மறுசுழற்சி

இச்சிறப்புச் சேகரிப்பு பணியின் போது சேகரிக்கப்பட்ட மின்னணுக் கழிவுகள், உரிய விதிமுறைகளின்படி, இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மின்னணுக் கழிவுகளை, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் முறையாக மறுசுழற்சி செய்யும் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் இம்முயற்சிக்கு பொதுமக்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் (RWAs), கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர அமைப்புகளிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இச்சிறப்புச் சேகரிப்பு முகாமின் மூலம் மின்னணுக் கழிவுகள் பொது இடங்கள், சாலையோரங்கள் மற்றும் நீர்நிலைகளில் முறையற்ற வகையில் கொட்டப்படுவது தவிர்க்கப்படுவதுடன், அவற்றால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் பொதுமக்களின் உடல்நலப் பாதிப்புகளும் தடுக்கப்படுகின்றன.

பொதுமக்கள் தொடர்ந்து தங்களிடம் உள்ள பயன்படுத்தப்படாத மற்றும் பழுதடைந்த மின்னணு மற்றும் மின்சாதனக் கழிவுகளைத் தனியாகச் சேகரித்து, மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைத்து, இம்முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X