தமிழ்நாட்டில் 136 சைபர் குற்றவாளிகள் அதிரடி கைது: கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் தகவல்


தமிழ்நாட்டில் 136 சைபர் குற்றவாளிகள் அதிரடி கைது: கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் தகவல்
x

தமிழ்நாட்டில் 125 கைப்பேசிகள், 304 வங்கி கணக்குகள், 88 காசோலைகள், 107 டெபிட், கிரெடிட் கார்டுகள், 35 கணினிகள் போன்றவை சைபர் கிரைம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னை

தமிழ்நாடு இணைய வழி குற்றப் பிரிவின் கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு இணைய வழி குற்றப்பிரிவு மாநிலம் முழுவதும் நடத்திய அதிரடி கைது நடவடிக்கை "ஆபரேஷன் திரைநீக்கு-2" முடிவுக்கு வந்தது.

தமிழ்நாட்டில் சைபர் குற்றங்களுக்கு எதிரான ஒரு துரிதமான நடவடிக்கையில் தமிழ்நாட்டின் இணைய வழி குற்றப்பிரிவு 2024 டிசம்பர் 6, 7 மற்றும் 8 நாட்களில் "ஆபரேஷன் திரைநீக்கு-1" ஐ நடத்தி, மாநிலம் முழுவதும் 76 சைபர் குற்றவாளிகளை வெற்றிகரமாக கைது செய்தது. இந்த சிறப்பு கைது நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இரண்டாவது கட்டமாக "ஆபரேஷன் திரைநீக்கு-II" 2025 ஜூன் 2-ம்தேதி தொடங்கி 2025 ஜூன் 3-ம்தேதி முடிவடைந்தது. இணைய வழி குற்றப் பிரிவின் கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் வழிகாட்டுதலின் கீழ் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நகரங்களிலும் திட்டமிட்டு, ஒருங்கிணைத்து இணைய வழி குற்றப்பிரிவின் நேரடி கண்காணிப்புடன் நடத்தப்பட்டது.

இந்த பெரிய அளவிலான நடவடிக்கை குற்றவாளிகள் தொடர்பான விஞ்ஞான விசாரணை அடிப்படையில் உருவாக்கப்பட்ட சுயவிவரங்கள் மற்றும் இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C), உள்துறை அமைச்சகம் செயல்படுத்தும் தேசிய சைபர் கிரைம் அறிக்கையிடல் தளம் (National Cyber Crime Reporting Portal) மூலம் குற்றம் சாட்டப்பட்டவர்களின் சுயவிவரத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. மேலும் சைபர் குற்ற வலையமைப்புகளின் நிதி தரவுகள் மற்றும் வங்கிக் கணக்குகளின் பணப்பரிவர்த்தனை ஆய்வுகள் மூலம் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனர். இந்த நடவடிக்கையை இணைய வழி குற்றப்பிரிவு எஸ்.பி. ஷஹ்னாஸ் நேரடி கண்காணிப்பில் நடைபெறப்பட்டது.

மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும், நகரத்திலும் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, இணையவழி குற்றப்பிரிவின் தலைமையாகதில் உள்ள பிரதான கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் மொத்தம் 136 சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தமிழக சைபர் குற்ற காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 159 வழக்குகளுடன் தொடர்புடையவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த நடவடிக்கையில் 30க்கும் மேற்பட்ட போலியான நிறுவனங்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட போலி வங்கிகணக்குகளை உருவாக்கி பயன்படுத்தும் ஒரு கும்பலின் பின்னால் செயல்படும் 6 பேர் கொண்ட ஒரு குழு அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இத்தகைய கைதுகள் மாநிலத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட இணையக் குற்றங்களை தடுப்பதில் குறிப்பிடத்தக்க வெற்றியைக் குறிக்கின்றன. இதில் 125 கைப்பேசிகள், 304 வங்கி கணக்குகள், 88 காசோலைகள், 107 டெபிட்/கிரெடிட் கார்டுகள், 35 கணினிகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை தேசிய அளவில் நடத்திய பெரிய அளவிலான சைபர் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்றாகும்.

மேலும் விசாரணைகள் தொடர்கின்றன. இணைய வழி குற்றப்பிரிவு தலைமையகத்தினால் கைதானவர்களிடமிருந்து டிஜிட்டல் ஆதாரங்களை ஆய்வு செய்து, இந்தியா முழுவதும் பரவியுள்ள குற்றவியல் வலையமைப்புகளின் மற்ற தகவல்களை வெளிக்கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகிறது. கைது செய்தவர்களுடன் தொடர்புடைய சைபர் மோசடி கும்பலின் மற்ற உறுப்பினர்களைக் கண்காணித்து கைது செய்வதற்கும், மோசடி செய்பவர்களின் நிதியைக் கண்டுபிடிப்பதற்கும், நாடு முழுவதும் சைபர் கிரைம் நடவடிக்கைகளுடன் பரந்த தொடர்புகளைக் கண்டறிவதற்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் இணைய வழி குற்றப் பிரிவின் இந்த திட்டமிடப்பட்ட செயல்பாட்டை பாராட்டி, தமிழகத்தில் செயல்படும் சர்வதேச சைபர் குற்ற கும்பலை ஒழிக்க எடுத்துள்ள அசாத்திய முயற்சியென புகழ்ந்துள்ளார். இணையத்தில் பாதுகாப்பை பராமரிக்க இணையவழி குற்றப்பிரிவு பொதுமக்களுக்கு பின்வரும் பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

பொதுமக்களுக்கான அறிவுரை:

•கடவுச்சொற்கள், ஓடிபி அல்லது வங்கி தகவல் போன்ற முக்கியமான விவரங்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும்.

•முன்பின் தெரியாத நபர்களிடம் இருந்து அவசர தேவைக்கு பணம் கேட்டு வரும் தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு பதில் அளிக்காதீர்கள்.

•ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட மோசடி சமூக ஊடக தளங்கள் மற்றும் சுயவிவரங்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.

•உண்மையாக இருப்பது அல்லது மிகவும் லாபகரமானது என்று தோன்றும் சலுகைகள் குறித்து கவனமாக இருங்கள்.

•கமிஷன்களுக்காக உங்கள் வங்கிக் கணக்கை ஒருபோதும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

•கூகிள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் போன்ற அதிகாரப்பூர்வ மூலங்களிலிருந்து மட்டுமே செயலிகளைப் பதிவிறக்கவும். நம்பமுடியாத மூலங்களிலிருந்து செயலிகளைப் பதிவிறக்குவதைத் தவிர்க்கவும்.

•பாதுகாப்பான ஆன்லைன் பரிவர்த்தனைகளைப் பயன்படுத்துங்கள் மற்றும் நிதி நடவடிக்கைகளுக்கு பொது வைஃபை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

•இரண்டு காரணி அங்கீகாரத்தை செயல்படுத்தவும், உங்கள் கடவுச்சொற்களை தவறாமல் புதுப்பிக்கவும்.

புகார் அளிக்க:

நீங்கள் ஏதேனும் சைபர் குற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று நீங்கள் சந்தேகித்தால் அல்லது ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டைக் கண்டறிந்தால், உடனடியாக நடவடிக்கை எடுப்பது முக்கியம். நிதி மோசடிகள் ஏற்பட்டால் சைபர் கிரைம் உதவி எண் 1930-ஐ டயல் செய்யவும் அல்லது www.cybercrime.gov.in இல் புகார் அளிக்கவும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story