ரூ.14 கோடியில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணி

பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் ரூ.14 கோடியே 7 லட்சம் மதிப்பில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணியை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்
ரூ.14 கோடியில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணி
Published on

பரங்கிப்பேட்டை

உள்கட்டமைப்பு பணி

சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் ரூ.14 கோடியே 7 லட்சம் மதிப்பில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிக்கு அடிக்கல் நாட்டு விழா சுற்றுலா மைய வளாகத்தில் நடைபெற்றுது. இதற்கு கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். சிதம்பரம் உதவி கலெக்டர் சுவேதா சுமன், தாசில்தார் செல்வகுமார், சுற்றுலா மேலாளர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி துணை தலைவரும், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினருமான கிள்ளைரவீந்திரன், பேரூராட்சி தலைவர் மல்லிகா ஆகியோர் வரவேற்றனா.

நிகழ்ச்சியில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் உள் கட்டமைப்பு மேம்பாட்டு பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

5.27 ஏக்கர் பரப்பளவில்

பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் 5.27 ஏக்கர் பரப்பளவில் 23 ஆயிரத்து 744.78 சதுர அடியில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. இதில் தரைத்தளத்தில் ஓய்வு அறை, முன் பதிவு மையம், உணவகம், முதல் தளத்தில் ஏ.சி.வசதியுடன் கூடிய பயணிகள் தங்கும் அறை, பார்வையாளர்கள் தளம், மதுபானக்கூடம் மற்றும் நான்கு சக்கரம், இருசக்கர வாகனங்கள், பஸ்கள் நிறுத்தும் இடம் ஆகியவை அமைக்கப்பட உள்ளது. இது தவிர குழந்தைகள் விளையாட்டு கூடம், ரவுண்டானா, போன்றவைளும் அமைய உள்ளன. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் முத்து பெருமாள், மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் நல்லதம்பி, மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் நீதிமணி, பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் தேன்மொழிசங்கர், நகர செயலாளர் முனவர்உசேன், பேரூராட்சி மன்ற துணை தலைவர் முகமதுயூனூஸ், புவனகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் மனோகர், சிதம்பரம் உதவி உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கம், சதீஷ், கிள்ளை பேரூராட்சி செயல் அலுவலர் செல்வி மற்றும் சுற்றுலா, வருவாய்த்துறை அலுவலர்கள், தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில் பிச்சாவரம் சுற்றுலா மேலாளர் தினேஷ்குமார் நன்றி கூறினார். முன்னதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் கிள்ளை ரவீந்திரன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com