தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு

144 தடை உத்தரவு திருமணம் மற்றும் இறுதி சடங்கு ஊர்வலங்களுக்குப் பொருந்தாது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 2 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் நாளையும் (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாளும் வீரசக்கதேவி ஆலய திருவிழா நடக்கிறது. இதனை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக விழா நடைபெறும் பொருட்டும், சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கவும்,  2 நாட்கள் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதனால் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்தும் பிற மாவட்டங்களில் இருந்தும் வந்து விழாவில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் வாள், கத்தி, கம்பு, போன்ற அபாயகரமான ஆட்சேபகரமான ஆயுதங்கள் ஊர்வலமாக கொண்டு வருவதற்கும், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாகவும் திருவிழாவுக்கு கலந்து கொள்ள அழைத்து வரப்படுவதற்கும் தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்பட்டு உள்ளது.

இத்தடை உத்தரவில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலாவுக்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் தினசரி செல்லும் ஆம்னி பஸ்கள் ஆகியவற்றிற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

மேற்படி நாட்களில் வேறு ஏதேனும் கூட்டங்கள், அன்னதானம் மற்றும் ஊர்வலங்கள் நடத்த இருந்தால், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை அணுகி முன் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் இந்த தடை உத்தரவு திருமணம் மற்றும் இறுதி சடங்கு ஊர்வலங்களுக்குப் பொருந்தாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com