

காஞ்சீபுரத்தை அடுத்த பெரியநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கணபதி (வயது 52). முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவருடைய மனைவி செல்வி. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
நேற்று முன்தினம் அமாவாசை என்பதால் கணபதி வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் ராமேஸ்வரத்துக்கு சென்றுவிட்டார். அங்கு சாமி தரிசனம் முடித்து விட்டு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 145 பவுன் தங்க நகை, 4 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.20 லட்சம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
கணபதி தனது குடும்பத்துடன் ராமேஸ்வரம் சென்றிருப்பதை அறிந்த கொள்ளையர்கள், அவரது வீட்டின் முன்பக்க பூட்டை உடைக்க முடியாததால் பின்பக்க கதவில் உள்ள பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கைவரிசையை காட்டி இருப்பது தெரிந்தது. இது குறித்து மாகரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.