தேசிய திறனடைவு தேர்வை 14,750 மாணவர்கள் எழுதினர்

தேசிய திறனடைவு கணக்கெடுப்பு தேர்வினை புதுச்சேரியில் 14 ஆயிரம் 750 மாணவ, மாணவிகள் எழுதினார்கள். மொழி பாடத்தில் தமிழுக்கு பதில் இந்தியில் கேள்விகள் இருந்ததால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தேசிய திறனடைவு தேர்வை 14,750 மாணவர்கள் எழுதினர்
Published on

தேசிய திறனடைவு கணக்கெடுப்பு தேர்வினை புதுச்சேரியில் 14 ஆயிரம் 750 மாணவ, மாணவிகள் எழுதினார்கள். மொழி பாடத்தில் தமிழுக்கு பதில் இந்தியில் கேள்விகள் இருந்ததால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தேசிய திறனடைவு கணக்கெடுப்பு

பள்ளி மாணவர்களின் கற்றல் அடைவுகளை மதிப்பிடுவதற்காக மத்திய அரசின் கல்வி அமைச்சகம் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பள்ளி மாணவர்களிடையே தேசிய திறனடைவு கணக்கெடுப்பினை (நாஸ்) நடத்தி வருகிறது. இந்த திறனடைவு கணக்கெடுப்பு தேர்வு 3, 5, 8 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களிடையே நேற்று நடத்தப்பட்டது.

இந்த தேர்வில் புதுவை பிராந்தியத்தில் 155 பள்ளிகளை சேர்ந்த 6 ஆயிரத்து 525 மாணவர்களும், காரைக்காலில் 101 பள்ளிகளை சேர்ந்த 4 ஆயிரத்து 650 பேர், மாகியில் 28 பள்ளிகளை சேர்ந்த 1,681 பேர், ஏனாமில் 29 பள்ளிகளை சேர்ந்த 1,893 பேர் என ஒட்டுமொத்தமாக 313 பள்ளிகளை சேர்ந்த 14 ஆயிரத்து 749 மாணவ-மாணவிகள் பங்கேற்று எழுதினார்கள்.

இந்தியில் கேள்வி

தேர்வுகளில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மொழிப்பாடம் இருந்தது. அதில் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு மொழியில் கேள்விகள் இருக்கும் என்று மாணவர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தமிழுக்கு பதிலாக கேள்விகள் இந்தியில் இருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் இதுகுறித்து பள்ளி ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். இந்தியை தவிர்த்து பிற கேள்விகளுக்கு பதில் எழுதுமாறு ஆசிரியர்கள் அறிவுறுத்தினர்.

மொழி பாடத்தில் தமிழுக்கு பதில் இந்தியில் கேள்விகள் இருந்ததால் மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக கல்வித்துறைக்கும் புகார்கள் சென்றன. இதைத்தொடர்ந்து இந்தி கேள்வித்தாள்கள் எத்தனை பேருக்கு வந்தது என்பது தொடர்பாக விவரங்களை சேகரிக்க பள்ளிக்கல்வி இயக்குனர் ருத்ரகவுடு உத்தரவிட்டுள்ளார்.

அதன்பின்பு இந்த கேள்வித்தாள் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com