14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் - என்ஜினீயர் உள்பட 11 பேர் கைது

குமாரபாளையம் அருகே 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக என்ஜினீயர் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் - என்ஜினீயர் உள்பட 11 பேர் கைது
Published on

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள வட்டமலை பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளிக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் மூத்த மகள்கள் 2 பேருக்கு திருமணம் ஆகி விட்டது.

3-வது மகளுக்கு 14 வயதாகிறது. இவள் 6-ம் வகுப்பு வரை படித்து விட்டு அதே பகுதியில் உள்ள தனது அக்காள் வீட்டில் தங்கியிருந்தாள். அப்போது அக்காள் கணவர் சின்ராஜ் (வயது 32) என்பவர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனை அறிந்த சின்ராஜின் நண்பர்களான எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த குமார் உள்பட சிலரும் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இந்தநிலையில் குமார் தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததை சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்து உள்ளாள். இதுதொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து குமாரிடம் பஞ்சாயத்து பேசியுள்ளனர். அப்போது குமார் ரூ.10 ஆயிரம் கொடுத்துள்ளார். இதை வாங்கி உடல் நலம் பாதித்து இருந்த சிறுமியின் தந்தையின் சிகிச்சைக்கு பயன்படுத்தி உள்ளனர்.

இதன்பின்னர் அந்த சிறுமி வீட்டு வேலைக்கு சென்றாள். அப்போதும் அவளுக்கு பாலியல் தொல்லை தொடர்ந்தது. அந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் பலர் தொடர்ந்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பெற்றோரிடம் சிறுமி கூறியுள்ளாள். இதைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ரஞ்சிதப்பிரியாவிடம் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

இதுபற்றி தீவிர விசாரணை செய்த ரஞ்சிதப்பிரியா நேற்று முன்தினம் திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக சின்ராஜ், எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி குமார் என்கிற செந்தில்குமார் (30), டிரைவர் வடிவேல் (29), குமாரபாளையம் பி.எஸ்.என்.எல். அலுவலக இளநிலை என்ஜினீயர் கண்ணன் (36), பவானியை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி மூர்த்தி (55), மினி பஸ் டிரைவர் சேகர் என்கிற நாய் சேகர் (25), திருவள்ளுவர் நகர் கம்பி கட்டும் தொழிலாளி கோபி என்கிற கோபாலகிருஷ்ணன் (32), சுந்தரம் நகர் விசைத்தறி தொழிலாளி அபிமன்னன் (37), திருவள்ளுவர் நகரை சேர்ந்தவரும், ஈரோடு ஆர்.என்.புதூர் தபால் அலுவலகத்தில் பணிபுரிபவருமான சரவணன் (30), குள்ளப்பா நகரை சேர்ந்த கொத்தனார் சங்கர் (24), சுந்தரம் நகர் வீட்டின் உரிமையாளர் பன்னீர் (32) ஆகிய 11 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தலைமறைவான ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

14 வயது சிறுமியை பலர் மிரட்டி கடந்த சில மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com