குருவாயூர் எக்ஸ்பிரசில் 1½ கிலோ தங்கம் கொள்ளை: கேரள நகைக்கடை ஊழியர்களிடம் தனிப்படை போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை

குருவாயூரில் இருந்து நாகர் கோவில் வழியாக சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ் பிரசில் கடந்த 15-ந் தேதி நகை வியாபாரியிடம் 1 கிலோ 400 கிராம் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
குருவாயூர் எக்ஸ்பிரசில்  1½ கிலோ தங்கம் கொள்ளை: கேரள நகைக்கடை ஊழியர்களிடம் தனிப்படை போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை
Published on

குருவாயூரில் இருந்து நாகர்கோவில் வழியாக சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில், கடந்த 15-ந்தேதி நகை வியாபாரியிடம் இருந்து 1 கிலோ 400 கிராம் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஜோஸ் (62) என்பவர், அங்குள்ள ஒரு நகைக்கடையில் இருந்து புதிய வடிவங்களில் தயாரிக்கப்படும் நகைகளை நெல்லை மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள நகைக்கடைகளுக்கு கொண்டு சென்று வழங்கி, பணம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

அதன்படி, நகைகளுடன் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலின் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் பயணம் செய்தபோது, அவர் வைத்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுதொடர்பாக ஜோஸ் அளித்த புகாரின் பேரில் குழித்துறை ரெயில் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவின் பேரில், குழித்துறை போலீசாரும் விசாரணையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நகைகளை திருடிச் சென்ற நபர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. தனிப்படை போலீசார் குழித்துறை ரெயில் நிலையம் மற்றும் நகர்ப்பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

அதில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் யாரேனும் உள்ளனரா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ஒரு தனிப்படை கேரளாவிற்குச் சென்று விசாரணை நடத்தி வருகிறது.வியாபாரி ஜோஸ் திருச்சூரில் இருந்து புறப்பட்டபோதே யாரேனும் அவரை பின்தொடர்ந்து வந்து நகைகளை அபகரித்தார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.மேலும், ஜோஸ் நகைகளுடன் பயணம் செய்வது குறித்து நகைக்கடை ஊழியர்கள் யாருக்காவது தகவல் தெரிவித்தார்களா? என்ற அடிப்படையிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இதுதொடர்பாக அந்த நகைக்கடை ஊழியர்களிடம் தனிப்படை போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். சுமார் 10-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், நகைகளை அபகரித்த மர்மநபர் ரெயிலின் வேறு பெட்டிகளுக்கு சென்று, அதே ரெயிலில் நெல்லை நோக்கி பயணம் செய்திருக்கலாமா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நாகர்கோவில் ரெயில்வே போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.அவர்கள் நாகர்கோவில் டவுன் மற்றும் வள்ளியூர் ரெயில் நிலையங்களில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர். தனிப்படை போலீசார் மற்றும் ரெயில்வே போலீசாரின் விசாரணை தீவிரமடைந்துள்ளதால், இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் விரைவில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com