

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொல்லூர் பகுதியை சேர்ந்த ஜோஸ் (62), நெல்லையில் உள்ள பிரபல நகைக்கடைக்கு புதிய வடிவங்களில் தங்க நகைகள் தயாரித்து வழங்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக அவர் அடிக்கடி தங்க நகைகளுடன் திருச்சூரிலிருந்து நெல்லைக்கு பயணம் செய்வது வழக்கம்.அந்த வகையில், நேற்று முன்தினம் இரவு சுமார் 1 கிலோ 400 கிராம் தங்க நகைகளுடன், குருவாயூரிலிருந்து சென்னை நோக்கி சென்ற குருவாயூர் விரைவு ரெயிலின் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் ஜோஸ் பயணம் செய்தார்.இந்த ரெயில் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை ரெயில் நிலையத்தை நேற்று அதிகாலை வந்தடைந்தபோது, ஜோஸ் விழித்துப் பார்த்துள்ளார். அப்போது அருகில் வைத்திருந்த நகைப்பை மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து, ரெயில் பெட்டி முழுவதும் தேடியும் நகைப்பை கிடைக்காததால், அவர் உடனடியாக குழித்துறை ரெயில் நிலையத்தில் இறங்கி ரெயில்வே போலீசில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், குழித்துறை மற்றும் மார்த்தாண்டம் பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால், சந்தேகநபர்கள் யாரும் இதுவரை சிக்கவில்லை.இதனை தொடர்ந்து, தங்க நகைகளை திருடிச் சென்றவர்களை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.முதற்கட்ட விசாரணையில் ஜோஸ் போலீசாரிடம், “நான் அடிக்கடி ரெயிலில் நகைகள் கொண்டு செல்வது வழக்கம். முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் பயணம் செய்தால் தூங்காமல் விழிப்புடன் இருக்க முடியும் என்பதால் அங்கு பயணம் செய்தேன். ஆனால் அசதியில் தூங்கிய நேரத்தில் நகைகள் திருடப்பட்டுவிட்டன” என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, ஒரு தனிப்படை போலீசார் குழித்துறை ரெயில் நிலைய கண்காணிப்பு காமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மற்றொரு தனிப்படை போலீசார் கேரள மாநிலம் திருச்சூருக்கு விரைந்து சென்று, ஜோஸ் ரெயிலில் ஏறியபோது யாராவது அவரை பின்தொடர்ந்தார்களா என்பது குறித்து அங்குள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதேபோல் கொல்லம்,திருவனந்தபுரம் இரணியல், நாகர்கோவில் மற்றும் வள்ளியூர் ரெயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளையும் போலீசார் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், நாகர்கோவில் ரெயில்வே பாதுகாப்புப் படை போலீசாரும் விசாரணையில் இணைந்து, குழித்துறை மற்றும் இரணியல் ரெயில் நிலையங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.