

ஆத்தூர்:-
ஆத்தூர் நகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையை தடுக்க கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்திட நகரசபை ஆணையாளர் (பொறுப்பு) கணேசன் உத்தரவிட்டார். அதன்பேரில் துப்புரவு அலுவலர் முத்து கணேஷ், துப்புரவு ஆய்வாளர் குமார் மற்றும் அலுவலர்கள் ஆத்தூர் பஸ் நிலையம், ராணிப்பேட்டை பகுதிகளில் பழக்கடைகள், காய்கறிகள் பீடா கடைகளில் திடீரென சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் 9 கடைகளில் இருந்த15 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.3 ஆயிரத்து 500 அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.