

சிவகிரி,
சிவகிரி அருகே உள்ள ராமநாதபுரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சத்திய மூர்த்தி மனைவி ஞான பாக்கியம். (வயது 77). இவர் நேற்று அதிகாலையில் தனது வீட்டின் முன்பு வாசலில் தண்ணீர் தெளிக்க சென்றார். அப்போது அங்கு வந்த தெருநாய் திடீரென்று ஞானபாக்கியத்தை கடித்து குதறியது. இதனால் அவர் அலறி துடித்தார். உடனே குடும்பத்தினர், அக்கம்பக்கத்தினர் வந்து தெருநாயை விரட்டினர். பின்னர் அந்த தெருநாய் அப்பகுதியில் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த முத்துக்கனி (40) என்பவரையும் கடித்தது. மேலும் குருசாமி பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்த பால்பாண்டி மனைவி மண்டோதரி (63), செல்லையா மனைவி சமுத்திரம் (80) ஆகியோரையும் தெரு நாய் கடித்து குதறியது.
அதிகாலையில் வீட்டின் முற்றத்தில் தண்ணீர் தெளித்து கொண்டிருந்தவர்களையும், கோவிலுக்கு சென்று திரும்பியவர்களையும், கடைக்கு சென்றவர்களையும் தெருநாய் கடித்து குதறியது. இந்த தெருநாய் நேற்று முன்தினம் திருமலாபுரம் என்ற அருளாட்சி பகுதியில் இந்திரா காலனியைச் சேர்ந்த மூக்கன் மகன் ஸ்ரீராம் (56), முத்தாலம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செல்லையா மகன் முத்துப்பாண்டி (60) உள்ளிட்டவர்களையும் கடித்தது.
தெருநாய் கடித்ததில் 15-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.எனவே பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.