15 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின

திருவாரூர் மாவட்டத்தில் கன மழையால் 15 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. வயலில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Published on

திருவாரூர் மாவட்டத்தில் கன மழையால் 15 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. வயலில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

குறுவை சாகுபடி

இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து முன்னதாக மே 24-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டதால் திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 57 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. தற்போது குறுவை அறுவடை பணிகள் 95 சதவீதம் முடிவடைந்துள்ளன.

திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 517 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தாளடி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.இதில் பெரும்பாலும் விவசாயிகள் நேரடி விதைப்பு முறையில் விதை விதைத்துள்ளனர்.

நெற்பயிர்கள் அழுகும் அபாயம்

இந்த நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்து சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கரில் தாளடி சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் தண்ணீர் தேங்கி நற்பயிர்கள் மூழ்கி அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். சம்பா சாகுபடியில் சன்னரகம் 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி உள்ளது. இதனால் கவலை அடைந்த விவசாயிகள் வயலில் தேங்கி உள்ள மழைநீரை வெளியேற்றும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

விவசாயிகள் கவலை

இந்த மழை நீடித்தால் நெற்பயிர்கள் பாதிப்பு அதிகரிக்க கூடும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வடிகால் வாய்க்கால்களை முழுமையாக தூர்வாரி தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தநிலையில் நேற்று காலை முதல் மழை முற்றிலும் நின்று வெயில் அடித்தது. இதனால் மழையில் நனைந்த அறுவடை செய்யப்பட்ட குறுவை நெல்லை காய வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com