

சென்னை,
தமிழ்நாடு 2036-ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொரு ளாதாரமாக மாற வேண்டும் என்ற இலக்கை அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால் அந்த இலக்கை அடைய தற்போதைய அளவை விட அதிகமான மூலதன முதலீடுகளும், கட்டமைப்பு வசதிகள் மேம்பாடும் அவசியம் என்று வெள்ளை அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
அந்த அறிக்கையின்படி, 2025-26-ம் ஆண்டில் மாநிலத்தின் மூலதனச் செலவினம் ரூ.50,911 கோடியாக உள்ளது. இது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜி.எஸ்.டி.பி.) 1.44 சதவீதமாக மட்டுமே உள்ளது. அதேநேரத்தில் குஜராத்தில் இது 2.86 சதவீதமாகவும், கர்நாடகா மற்றும் மராட்டியத்தில் தலா 1.92 சதவீதமாகவும் உள்ளது. மேலும் மொத்த செலவினத்தில் மூலதன முதலீட்டின் பங்கு தமிழ்நாட்டில் 11.8 சதவீதமாக மட்டுமே உள்ளது.
குஜராத்தில் இது 26.8 சதவீதமாகவும், கர்நாடகாவில் 17 சதவீதமாகவும், மராட்டியத் தில் 13 சதவீதமாகவும் உள்ளது. மூலதன முதலீடுகள் என்பது சாலைகள், பாலங்கள், துறைமுகங்கள், தொழில் பூங்காக்கள், குடிநீர் திட்டங்கள், கல்வி மற்றும் சுகாதார கட்டமைப்புகள் போன்ற நீண்டகால வளர்ச்சிக்கான சொத்துகளை உருவாக்கும் செலவினங்களாகும். இத்தகைய முதலீடுகளே வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி மற்றும் பொருளாதார உற்பத்தியை அதிகரிக்க உதவும் என்று அறிக்கை குறிப்பிடுகிறது.
எனவே, 2036-ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்ட வேண்டுமெனில், வருவாய்ச் செலவுகளைக் கட்டுப்படுத்தி, மூலதன முதலீடுகளுக்கான நிதி ஒதுக்கீட்டை கணிசமாக அதிகரிக்க வேண்டும் என்று வெள்ளை அறிக்கை பரிந்துரைத்துள்ளது.