வனப்பகுதிக்குள் அழைத்துச்சென்று 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: தந்தையின் நண்பருக்கு வலைவீச்சு

வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் சிறுமி பூ பறித்துக்கொண்டிருந்தாள்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி சம்பவத்தன்று தனது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் பூ பறித்துக்கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த சிறுமியின் தந்தையின் நண்பரான பொறையூரை சேர்ந்த லாாி டிரைவர் கோவிந்தராஜ் (வயது 42) என்பவர் சிறுமியை அந்த கிராமத்தில் உள்ள வனப்பகுதிக்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
இந்த நிலையில் சிறுமியை காணாமல் அவளது தந்தை தேடிச்சென்றார். அப்போது வனப்பகுதியில் நின்ற சிறுமியிடம் விசாரித்தபோது அவள் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி அழுதாள். பின்னர் இது குறித்து சிறுமியின் தந்தை உளுந்தூா்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் கோவிந்தராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தப்பி ஓடிய கோவிந்தராஜை வலைவீசி தேடி வருகின்றனர். பூ பறித்துக்கொண்டிருந்த சிறுமியை அவளது தந்தையின் நண்பர் வனப்பகுதிக்குள் அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






