

நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் பகுதியில் 15 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். எஸ்.எஸ்.எல்.சி. படித்து சிறுமி தனது தந்தை செல்போனில் இன்ஸ்டாகிராம் கணக்கை பயன்படுத்தி வந்துள்ளார். அவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பெரம்பலூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இன்ஸ்டாகிராம் காதலனை பார்க்க தனது தந்தையின் செல்போனை எடுத்துக் கொண்டு யாரிடமும் சொல்லாமல் வீட்டைவிட்டு வெளியேறிய சிறுமி திருச்செங்கோடு வந்துள்ளார். அங்கிருந்து பாலக்காட்டிற்கு எப்படி செல்வது என்று தெரியாமல் திணறிய சிறுமி, திருச்செங்கோடு அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் தஞ்சமடைந்தார்.
நள்ளிரவு வரை அங்கேயே இருந்ததால் சிறுமியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்து பணியில் இருந்து நர்சுகள் சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது சிறுமி முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதுகுறித்து திருச்செங்கோடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிறுமியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இன்ஸ்டாகிராம் காதலனை பார்க்க பெரம்பலூர் சென்றதும், வழி தெரியாததால் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் தஞ்சமடைந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து சிறுமிக்கு அறிவுரை வழங்கிய போலீசார் பெற்றோரை வரவழைத்து அவர்களிடம் சிறுமியை ஒப்படைத்தனர். இந்த சம்பவம் திருச்செங்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.