இந்திய கடலோர காவல்படையின் 50-வது நிறுவன தினத்தை முன்னிட்டு 1,500 கி.மீ. மோட்டார் சைக்கிள் பேரணி

தூத்துக்குடி மற்றும் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒரே நேரத்தில் இரண்டு கட்டங்களாக பேரணி தொடங்கி சென்னையில் நிறைவடைந்தது.
சென்னை,
இந்திய கடலோர காவல்படை (ICG) தனது 50-வது நிறுவன தினத்தைக் கொண்டாடும் வகையில் 1,500 கி.மீ. மோட்டார் சைக்கிள் பயணத்திற்கு ஏற்பாடு செய்தது. இப்பயணம், கடலோர காவல்படை கிழக்கு மண்டல தலைமையகம், சென்னை சார்பில் 50 கடலோர காவல்படை வீரர்கள் பங்கேற்புடன் நடத்தப்பட்டது.
இந்தப் பேரணி தூத்துக்குடி மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இரு இடங்களில் இருந்து ஒரே நேரத்தில் இரண்டு கட்டங்களாகத் தொடங்கப்பட்டது. ஐந்து நாட்களில் இப்பேரணி சுமார் 1,500 கி.மீ. தூரத்தைக் கடந்து சென்னையில் நிறைவடைந்தது. ஆந்திரப் பிரதேசத்திலிருந்து கிளம்பிய பேரணியை கடலோர காவல்படை ஆந்திரப் பிரதேச மாவட்டத் தளபதி, துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ராஜேஷ் மிட்டல் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடியிலிருந்து புறப்பட்ட பேரணியை தூத்துக்குடி சுங்கத்துறை ஆணையர் விகாஸ் நாயர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தப் பேரணிகள் வழியில் காக்கிநாடா, விஜயவாடா, நிஜாம்பட்டினம், கிருஷ்ணபட்டினம், மண்டபம், காரைக்கால் மற்றும் புதுச்சேரி போன்ற முக்கிய கடலோரப் பகுதிகளை கடந்து வந்தன. நிறைவாக இந்தப் பேரணிக்கு சென்னையில் பாரம்பரிய ராணுவ பாணியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பேரணியில் பங்கேற்ற வீரர்களை கிழக்கு மண்டல கடலோர காவல்படைத் தளபதி, இன்ஸ்பெக்டர் ஜெனரல் டி.எஸ். சைனி கவுரவித்தார். அவர் அனைத்து வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் முயற்சிகளைப் பாராட்டினார்.
இப்பயணம், இந்தியாவின் கடல்சார் நலன்களைப் பாதுகாப்பதிலும், மீனவர்கள் உட்பட கடல் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், இந்திய கடலோர காவல்படை "கடலின் காவலர்களாக" ஆற்றிவரும் பங்கை எடுத்துக்காட்டியது. கடல்சார் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக மீனவர்களை ஒருங்கிணைப்பதை ஊக்குவிக்கும் வகையில், பயண வழியில் சமூக கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்தியாவின் செழுமையான கடல்சார் பாரம்பரியம் மற்றும் கடலோரப் பாதுகாப்பு இதில் எடுத்துரைக்கப்பட்டன.
இந்தப் பேரணியின்போது மரம் நடுதல், பெண்கள் பாதுகாப்பு, பெண்கல்வி, தூய்மை இந்தியா இயக்கம் போன்ற தேசிய முயற்சிகள் முன்னிலைப்படுத்தப்பட்டன.






