நேர்த்திக்கடன் செலுத்தும்போது தவறு நடக்காமல் இருக்க 550 கோவில்களுக்கு 1,500 கையடக்க கருவிகள்

பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும்போது தவறுகள் நடக்காமல் இருப்பதற்காக 550 கோவில்களுக்கு 1,500 கையடக்க கருவிகளை (ஸ்வைப்பிங் எந்திரம்) அமைச்சர் சேகர்பாபு, கோவில் இணை கமிஷனர்களிடம் வழங்கினார்.
நேர்த்திக்கடன் செலுத்தும்போது தவறு நடக்காமல் இருக்க 550 கோவில்களுக்கு 1,500 கையடக்க கருவிகள்
Published on

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 550 கோவில்களுக்கு 1,500 கையடக்க கருவிகளை (ஸ்வைப்பிங் எந்திரம்) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கோவில் இணை கமிஷனர்களிடம் வழங்கினார். கமிஷனர் ஜெ.குமரகுருபரன் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார்.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

கட்டண மையங்களில் கணினி

550 கோவில்களில் பக்தர்கள் எளிதில் பயன்பெறும் வகையில் கோவில் சேவைகளுக்கு இணைய வழியில் முன்பதிவு செய்து கொள்ளவும், கட்டண சீட்டு மையங்களில் கணினி வாயிலாக ரசீதுகள் பெறுவதற்கும் இந்து சமய அறநிலையத்துறையின் வலைதளத்தில் (www.hrce.tn.gov.in) வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு இணையவழியிலும், கட்டணச்சீட்டு மையங்களில் கணினி மூலம் வழங்கப்படும் ரசீதுகளில் விரைவு குறியீடு அச்சிடப்பட்டு இருக்கும்.

சேவைகளை முன்பதிவு செய்யும் வசதியை எளிமைப்படுத்தவும், விரைவுபடுத்தவும் மற்றும் கட்டண சீட்டு மையங்களில் கூட்டத்தை தவிர்க்கவும் 1,500 கையடக்க கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் அடையாளமாக திருத்தணி சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு 22, திருவல்லிக்கேணி பார்த்தசாரதிசாமி கோவிலுக்கு 4, திருவொற்றியூர் தியாகராஜசாமி கோவிலுக்கு 8, வடபழனி முருகன் கோவிலுக்கு 5, திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலுக்கு 6 மற்றும் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலுக்கு 5 என மொத்தம் 50 கையடக்க கருவிகள் (ஸ்வைப்பிங் எந்திரம்) வழங்கப்பட்டுள்ளது.

தவறுகளை தடுக்க

பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும்போது தவறுகள் நடைபெறாமல் இருப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்திற்கு பக்தர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே, இந்த திட்டம் அனைத்து கோவில்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்.

இந்த கையடக்க கருவிகளில் 2 சிம் கார்டுகளை பொருத்தலாம். பக்தர்களிடம் சேவைக்கான கட்டணத்தை ரொக்கமாக பெற்றுக்கொண்டு விரைவுகுறியீடு அச்சிடப்பட்ட ரசீது வழங்கப்படும். வெகுவிரைவில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளையும் உபயோகப்படுத்தி கட்டணம் செலுத்தும் முறையும் அறிமுகப்படுத்தப்படும். இந்த சேவை பாரத ஸ்டேட் வங்கி மற்றும் தேசிய தகவல் மையத்துடன் இணைந்து இந்து சமய அறநிலையத்துறையின் ஒருங்கிணைந்த கோவில் மேலாண்மை திட்ட மென்பொருள் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது.

கோவில் சிலைகள்

அயோத்தியா மண்டபத்தை பொருத்தளவில் கோர்ட்டு என்ன வழிகாட்டுதலை பிறப்பிக்கிறதோ அந்த வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலையத்துறை செயல்படும். அடுத்தகட்ட நடவடிக்கையாக சட்ட வல்லுனர்களுடன் ஆராய்ந்து முதல்-அமைச்சரிடம் கொண்டு சென்று முடிவு எடுக்கப்படும்.

அதிகமாக பக்தர்கள் கூடுகின்ற தேர்திருவிழாக்களில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். வெளிநாடுகளில் மீட்கப்பட்டு அருங்காட்சியகங்கள் வைக்கப்பட்டுள்ள சிலைகள் எந்த கோவிலுக்கு சொந்தமானது என ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில் சிலைகளை உரிய கோவில்களில் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் (நிலங்கள் பிரிவு) ஆர்.சுகுமார், இணை கமிஷனர்கள் ந.தனபால், அர.சுதர்சன், எ.டி.பரஞ்சோதி, சி.லட்சுமணன், ரேணுகாதேவி, தா.காவேரி, கே.சித்ராதேவி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com