

சென்னை,
தமிழக நீர்வளத்துறை பராமரிப்பில், 90 அணைகள் மற்றும் நீர் தேக்கங்கள் உள்ளன. இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு 224 டி.எம்.சி. ஆகும். தற்போது, 90 அணைகளிலும் சேர்த்து, 79.21 டி.எம்.சி. அதாவது 35.31 சதவீதம் நீர் மட்டுமே கையிருப்பு உள் ளது. இருந்தாலும் கோடைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை.
அதிகபட்சமாக சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் 42.23 டி.எம்.சி, ஈரோடு பவானிசாகரில் 8, கோவை பரம்பிக்குளத்தில் 6.27, மணிமுத்தாறு 2.10 டி.எம்.சி.. சாத்தனூர் 1.88 டி.எம்.சி.. பேச்சிப்பாறை 1.38 டி.எம்.சி. நீர் அதிகபட்சம் இருப்பு உள்ளது.
தமிழகத்தில் 14 ஆயிரத்து 141 பாசன ஏரிகள் உள்ளன. அவற்றில் 689 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளது. 1,273 ஏரிகள் 76 முதல் 99 சதவீதம் நிரம்பியுள்ளது. 2 ஆயிரத்து 292 ஏரிகள் 51 சதவீதம் முதல் 75 சதவீதம் நிரம்பியுள்ளது. அதேபோல், 3 ஆயிரத்து 657 ஏரிகள் 26 முதல் 50 சதவீதமும், 4 ஆயிரத்து 722 ஏரிகள் 1 முதல் 25 சதவீதமும் நிரம்பியுள்ளது. 1,508 ஏரிகள் நீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது.
வறண்டு போயுள்ள 1,508 ஏரிகளில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டத்தில் 380 ஏரிகள் அடக்கம், தவிர மதுரையில் 264 ஏரிகளும், திண்டுக்கல் மாவட்டத்தில் 129 ஏரிகளும், திருநெல்வேலி மாவட்டத்தில் 84 ஏரிகளும், திருச்சியில் 82 ஏரிகளும், நாமக்கல் மாவட்டத்தில் 53 ஏரிகளும், தேனியில் 50 ஏரிகளும், சேலத்தில் 42 ஏரிகளும் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கின்றன.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. கோடை துவங்கி ஒருசில நாட்களிலேயே வெயில் தகிப்பதன் காரணமாக வெப்பம் அதிகரித்துள்ளதால் ஏரிகள் வறண்டு காணப்படுகின்றன. இன்னும் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் மேலும் பல ஏரிகள் வறண்டு போக கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.