ஈஷாவில் 15-வது ‘இன்சைட்’ தலைமைத்துவ நிகழ்ச்சி... சத்குரு தொடங்கி வைத்தார்!

ஈஷாவில் 15-வது ‘இன்சைட்’ தலைமைத்துவ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கி வைத்தார் 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள், தலைமை நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஈஷாவில் 15-வது ‘இன்சைட்’ தலைமைத்துவ நிகழ்ச்சி... சத்குரு தொடங்கி வைத்தார்!
Published on: 

கோவை,

கோவை ஈஷா யோக மையத்தில் சத்குரு அகாடமி சார்பில், தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் தலைமைத்துவத் திறன்களை மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘இன்சைட் (INSIGHT – The DNA of Success)’ நிகழ்ச்சியின் 15-வது பதிப்பை சத்குரு நேற்று (26/11/2026) தொடங்கி வைத்தார். அடுத்த 3 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் உயர் பொறுப்புகளில் உள்ள தலைமை நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். தொழில் நிறுவனங்களை வளர்ச்சியடையச் செய்வதுடன், தனிமனித ஆற்றல்களையும் மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய்வதற்கான தளமாக இந்நிகழ்ச்சி சத்குருவால் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இந்தாண்டு நிகழ்ச்சியில் அதானி குழுமத்தின் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியும், வட அமெரிக்கப் பிரிவு தலைமைச் செயல் அதிகாரியுமான சுதீப்தா பட்டாச்சார்யா, அப்பல்லோ மருத்துவமனைகளின் இணை நிர்வாக இயக்குநர் டாக்டர் சங்கீதா ரெட்டி, ஹீரோ ஃபின்கார்ப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான அபிமன்யு முஞ்சால், மேட்ரிமோனி டாட் காம் நிறுவனத்தின் நிறுவனரும் இந்திய தொழில் கூட்டமைப்பின் (CII) தமிழ்நாடு பிரிவின் துணைத் தலைவருமான முருகவேல் ஜானகிராமன் ஆகியோர் வெவ்வேறு அமர்வுகளில் உரையாற்ற உள்ளனர்.

மேலும், எம்.கே. வென்ச்சர்ஸ் நிறுவனர் மது கேலா, அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஸ்ரீநாத் ரவிச்சந்திரன், வில்வா நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி க்ருத்திகா குமரன், மோக்லிக்ஸ் மற்றும் கிரெட்லிக்ஸ் நிறுவனங்களின் நிறுவனர் ராகுல் கார்க் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணி தொழில்முனைவோரும் பங்கேற்று, தொழில்களை தொடங்குதல், நிறுவனங்களை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு எடுத்துச் செல்லுதல் மற்றும் தலைமைத்துவம் குறித்த தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.

நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து சத்குரு பேசுகையில், "உலகின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய மனித அறிவு, தற்போது சேகரிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் தவறான கண்ணோட்டங்களுக்குள் சிக்கிக்கொண்டு மனிதர்களுக்குத் துன்பத்தை ஏற்படுத்தும் நிலைக்குச் சென்றுள்ளது. பல்வேறு பணிகளை இயந்திரங்கள் மேற்கொள்ளத் தொடங்கியுள்ள நிலையில், மனிதர்கள் தங்களது எல்லைகளைக் கடந்து செயல்பட வேண்டும். தகவல்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட சிந்தனையில் தங்களைச் சுருக்கிக் கொள்ளக் கூடாது.

உங்களுடைய செயல்பாடு தொழிலாக இருந்தாலும், கலை, இசை, விளையாட்டு, அரசியல் அல்லது ஆன்மீகமாக இருந்தாலும், உங்களது உள்நிலை மற்றும் செயல்திறனை எப்போதும் மிக உயர்ந்த நிலையில் வைத்திருப்பதே மிகவும் முக்கியம்" எனப் பேசினார்

இந்நிகழ்ச்சியில், பல்வேறு தொழில் துறைகளைச் சேர்ந்த தலைவர்களுடன் பங்கேற்பாளர்கள் கலந்துரையாட உள்ளனர். தங்களது பார்வை மற்றும் புரிதலை மேம்படுத்துவதன் மூலம், தொழில் மற்றும் வாழ்க்கையில் உள்ள சிக்கல்களைத் தெளிவாகப் புரிந்துகொண்டு, சரியான முடிவுகளை எடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து இந்நிகழ்ச்சியில் விரிவாக விளக்கப்பட உள்ளது. சத்குரு அகாடமி நடத்தும் இன்சைட் நிகழ்ச்சி, தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் உயர் பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகளுக்கான முதன்மையான தலைமைத்துவப் பயிற்சி நிகழ்ச்சி ஆகும். 2012-ம் ஆண்டு சத்குருவால் தொடங்கப்பட்ட சத்குரு அகாடமி, தொழில்முறை திறன்களுடன் உள்நிலை நல்வாழ்வுக்கான பயிற்சிகளையும் ஒருங்கிணைத்து தலைமைத்துவப் பயிற்சிகளை வழங்கி வருகிறது. மனித ஆற்றல்களை முழுமையாக வெளிப்படுத்தி, அனைவரையும் உள்ளடக்கிய சிந்தனையுடன் செயல்பட்டு, சிறந்த முடிவுகளை எடுக்கக்கூடிய தலைவர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

கடந்த காலங்களில் நடைபெற்ற இன்சைட் நிகழ்ச்சிகளில், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் மறைந்த ரத்தன் டாடா, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் என்.ஆர். நாராயண மூர்த்தி, மேக் மை ட்ரிப் நிறுவனத்தின் இணை நிறுவனர் தீப் கல்ரா, இஸ்ரோவின் முன்னாள் தலைவர் எஸ்.

சோமநாத், பயோகான் நிறுவனத்தின் தலைவர் கிரண் மஜும்தார் ஷா, டைட்டன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சி.கே. வெங்கட்ராமன் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

X