சங்கராபுரம் அருகே துணிகரம்:விதவை வீட்டில் ரூ.16¾ லட்சம் நகை கொள்ளை :மர்ம நபர்கள் கைவரிசை

சங்கராபுரம் அருகே விதவை வீட்டின் பூட்டை உடைத்து ரூ.16¾ லட்சம் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
சங்கராபுரம் அருகே துணிகரம்:விதவை வீட்டில் ரூ.16¾ லட்சம் நகை கொள்ளை :மர்ம நபர்கள் கைவரிசை
Published on

சங்கராபுரம், 

இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ச.செல்லம்பட்டு கிராமம் நத்தக்குளம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி அஞ்சலை (வயது 56). இவரது கணவர் இறந்து விட்டார்.

அஞ்சலை வெளிநாட்டில் வீட்டு வேலை செய்து வந்தார். இதன் பின், கடந்த 2018-ம் ஆண்டு சொந்த ஊருக்கு திரும்பி வந்துவிட்டார். மேலும் இவரது மகன் கருணாநிதி. லாரி டிரைவரான இவருக்கு திருமணமாகி, 3 குழந்தைகளுடன் அதே கிராமத்தில் தனியாக வசித்து வருகிறார். அவ்வப்போது தனது தாய் வீட்டுக்கு வந்து செல்வார்.

39 பவுன் நகைகள் கொள்ளை

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அஞ்சலை வீட்டை பூட்டிவிட்டு சங்கராபுரம் அருகே குளத்தூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலை 7 மணிக்கு வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது, வீட்டின் முன்பக்கம் இருந்த மரக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தார்.

அங்கு படுக்கை அறையில் இருந்த கதவின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும், அந்த அறையின் உள்ளே இருந்த பீரோ கதவு மற்றும் அதன் உள்ளே இருந்த லாக்கரின் பூட்டு உடைந்த நிலையில் இருந்தது.

அதில் இருந்த 39 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளைபோயிருந்தது. இதன் மதிப்பு ரூ.16 லட்சத்து 85 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து அஞ்சலை சங்கராபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. கொள்ளை நடந்த இடத்தில் இருந்து சுமார் கிலோ மீட்டர் தூரம் ஓடி, அங்குள்ள மலைப்பாதை அருகே நின்றது. தொடர்ந்து, கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, அங்கு பதிவாகி இருந்த கை ரேகைகளை பதிவு செய்தனர்.

வங்கியில் இருந்து மீட்டு வந்த நகைகள்

அஞ்சலை கடந்த 3 மாதத்துக்கு முன்பு நிலம் ஒன்றை விற்பனை செய்துள்ளார். அதில் கிடைத்த பணத்தை வைத்து, ஏற்கனவே வங்கியில் அடமானம் வைத்திருந்த 39 பவுன் நகைகளை மீட்டு தனது வீட்டில் வைத்திருந்தார். இந்த நிலையில் தான் நகை கொள்ளைபோய் இருக்கிறது. அதோடு, நகை இருந்த பீரோவில் துணிகள் அனைத்தும் அப்படியே அடுக்கி வைத்தாற்போன்று உள்ளது. ஆனால் லாக்கரை மட்டும் குறிவைத்து உடைத்து நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருக்கிறார்கள். இதன் மூலம் அஞ்சலை வீட்டில் நகை வைத்து இருப்பது பற்றி நன்கு அறிந்திருந்த நபர்கள் தான், அஞ்சலை வெளியூர் சென்ற தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். மேலும் இது தொடர்பாக அஞ்சலை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com