பெரம்பலூர் மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் 16 பேருக்கு மருத்துவக்கல்லூரியில் சேர இடம் கிடைத்தது

மருத்துவப்படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டினால் பெரம்பலூர் மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் 16 பேருக்கு மருத்துவக்கல்லூரியில் சேர இடம் கிடைத்துள்ளது.
பெரம்பலூர் மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் 16 பேருக்கு மருத்துவக்கல்லூரியில் சேர இடம் கிடைத்தது
Published on

கலந்தாய்வு

தமிழகத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவக்கல்லூரிகளில் சேருவதற்கு அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நேற்று சென்னையில் தொடங்கியது.

நேற்று நடந்த கலந்தாய்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் பயின்ற 15 மாணவ-மாணவிகளுக்கும் மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பதற்கும், ஒரு மாணவிக்கு பல் மருத்துவம் படிப்பதற்கும் இடம் கிடைத்தது.

ஒரே பள்ளியை சேர்ந்த 9 மாணவர்கள்

அரசு பள்ளியில் பயின்று 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவப் படிப்பில் சேர உள் ஒதுக்கீட்டின் தகுதி பெற்ற பெரம்பலூ மாவட்ட அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் (சூப்பர்-30 வகுப்பு) பயின்ற மாணவர்களான புகழேந்திக்கு சென்னை மருத்துவக்கல்லூரியிலும், சாலினிக்கு அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியிலும், கனிசுக்கு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரியிலும், தமிழரசனுக்கு சேலம் அரசு மருத்துவக்கல்லூரியிலும், காயத்ரிக்கு அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரியிலும், புவனாவுக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரியிலும், பாலாஜிக்கு கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரியிலும், தினேஷ் கார்த்திக்கு நாகை அரசு மருத்துவக்கல்லூரியிலும், பூவரசனுக்கு விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரியிலும் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்தது.

வாழ்த்துக்குள் குவிந்து வருகிறது

இதேபோல் செட்டிகுளம் அரசு பள்ளி மாணவர் பிரவீனுக்கு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியிலும், அதே பள்ளி மாணவர் துளசிராஜனுக்கு திருச்சி அரசு மருத்துவக்கல்லூரியிலும், சு.ஆடுதுறை அரசு பள்ளி மாணவர் ராம்ஜிக்கு காஞ்சீபுரம் தனியார் மருத்துவக்கல்லூரியிலும், கிழுமத்தூர் அரசு மாதிரி பள்ளி மாணவி பிரித்விக்கு பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் தனியார் மருத்துவக்கல்லூரியிலும், பாடாலூர் அரசு மாதிரி பள்ளி மாணவர் அபினேஷ்ராஜாவுக்கு நீலகிரி அரசு மருத்துவக்கல்லூரியிலும், வெங்கலம் அரசு பள்ளி மாணவி கோகிலாவுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரியிலும் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பு படிக்க இடம் கிடைத்தது. வேப்பந்தட்டை அரசு பள்ளி மாணவி வெங்கடேஸ்வரிக்கு சென்னை அரசு பல் மருத்துவக்கல்லூரியில் பல் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது. மேற்கண்ட மாணவ-மாணவிகள் அனைவரும் மீண்டும் 'நீட்' தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவப்படிப்பில் சேர உள்ள பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளிகளை சேர்ந்த 16 மாணவ-மாணவிகளுக்கு நேரிலும், சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. கடந்த ஆண்டு அரசு இட ஒதுக்கீட்டில் 5 பேருக்கு தான் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com