

சேலம்,
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே உள்ள ராக்கியம்பட்டி மோரிவளவு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி கன்னியம்மாள். இவர்களுக்கு அபிஷேக் (26) மற்றும் 16 வயது மகன் என இரு மகன்கள் உள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுப்பிரமணி மற்றும் கன்னியம்மாள் இருவரும் உடல்நலக்குறைவால் உயிரிழந்தனர். அதன் பின்னர், இளைய மகனான 16 வயது சிறுவனை அவரது பாட்டி கந்தாயி (70) வளர்த்து வந்தார். மூத்த பேரன் அபிஷேக் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்.
கந்தாயிக்கு சொந்தமான 2½ ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தில் ஒரு பகுதியை தனது பெயருக்கு எழுதி தருமாறு 16 வயது சிறுவன் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று நிலம் தொடர்பாக பாட்டிக்கும் பேரனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சிறுவன், வீட்டில் இருந்த இரும்புக் கம்பியால் பாட்டியின் தலையில் பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த கந்தாயியை, வீட்டில் இருந்த கத்தியால் சிறுவன் சரமாரியாக குத்தியதாக தெரிகிறது. படுகாயமடைந்த கந்தாயி அலறி துடித்த நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவரது மூத்த பேரன் அபிஷேக், அவரை மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கந்தாயி மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதற்கிடையில், சொத்தை பிரித்து தர மறுத்ததால் பாட்டியை குத்திக்கொலை செய்ததாக கூறப்படும் 16 வயது சிறுவன், கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.