சமூக விரோதிகளை கண்காணிக்கும் வகையில் மாமல்லபுரத்தில் 160 கண்காணிப்பு கேமராக்கள்

சமூக விரோதிகளை கண்காணிக்கும் வகையில் மாமல்லபுரத்தில் 160 கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து போலீஸ் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சமூக விரோதிகளை கண்காணிக்கும் வகையில் மாமல்லபுரத்தில் 160 கண்காணிப்பு கேமராக்கள்
Published on

புராதன நகரம்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் நகரம் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய புராதன நகரமாக திகழ்கிறது. இங்கு பல்லவ மன்னர்கள் காலத்தில் வடிக்கப்பட்ட மண்டபங்கள், புராதன சிற்பங்கள் அதிக அளவில் உள்ளன. குறிப்பாக இங்குள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம், வெண்ணை உருண்டை பாறை, அர்ச்சுனன் தபசு போன்ற முக்கிய சிற்பங்கள் ஆக்ரா தாஜ்மகால் போல் உலக பாரம்பரிய நினைவு சின்னங்களாக உள்ளது. இந்த பாரம்பரிய நினைவு சின்னங்களை காண நாள்தோறும் ஏராளமான வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

மாமல்லபுரம் நகரம் சென்னைக்கு அருகில் குறுகிய தொலைவில் உள்ள புறநகர் பகுதி என்பதால் சென்னையை சுற்றி உள்ள புறநகர் மற்றும் பெருநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்களும், திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்ட மக்களும் சனி, ஞாயிறு மற்றும் பண்டிகை, விடுமுறை நாட்களில் பொழுதுபோக்குக்காக இங்கு அதிக அளவில் திரளுகின்றனர்.

குறிப்பாக சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு அங்கிருந்து தப்பி வருபவர்கள் கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரம் போன்ற பகுதிகளில் அடைக்கலமாகி விடுகின்றனர். இதனால் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் போர்வையில் திரியும் இவர்களின் நடமாட்டத்தையும், குடிபோதையில் அதிக வேகத்தில் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களையும், சுற்றுலா பயணிகளிடம் திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கவும், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதியில் பயணிகளின் பாதுகாப்பு, குற்றங்களை தவிர்க்கும் நடவடிக்கையாக செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் மாமல்லபுரம் நகரின் முக்கிய இடங்களில் 160 கண்காணிப்பு கேமராக்கள் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளன.

கண்காணிப்பு கேமராக்கள்

குறிப்பாக கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் நரேந்திரமோடி - சீன அதிபர் ஜின்பிங் மாமல்லபுரத்தில் சந்திப்பின்போது, இந்த பகுதியை தீவிரமாக கண்காணிக்க சிற்பகலை கூடங்கள் உள்ள பகுதிகள், தெருக்கள், சாலை சந்திப்புகள் என முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை போலீசார் அமைத்தனர். மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகள் அப்போது கண்காணிக்கப்பட்டு வந்தது. நாளடைவில் அந்த கேமராக்கள் பழுதடைந்து விட்டன.

இதையடுத்து பழுதடைந்த கேமராக்கள் அகற்றப்பட்டு தற்போது மாமல்லபுரத்தில் உள்ள முக்கிய இடங்களில் மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெகடர் ருக்மாங்கதன் ஆகியோர் மேற்பார்வையில் 160 கேமராக்கள் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளன. இந்த புதிய கண்காணிப்பு கேமராக்கள் அனைத்தும் மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துடன் இணைக்கப்பட்டு அங்கு பணியில் இருக்கும் போலீசார் இந்த கேமராவில் பதிவாகும் காட்சிகளை கண்காணித்து கொண்டே இருப்பார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com