எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 17 எம்.எல்.ஏக்கள் மனு

அதிமுக சட்டமன்ற குழு தலைவராக எடப்பாடி பழனிச்சாமி செயல்படுவார் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 17 எம்.எல்.ஏக்கள் மனு
Published on

சென்னை,

சட்டசபை தேர்தல் முடிந்தும் தமிழக அரசியல் களத்தின் பரபரப்பு ஓயவில்லை. நீண்ட இழுபறிக்கு பிறகு விஜய் நேற்று முதல்-அமைச்சராக பதவியேற்று கொண்டார். தவெக ஆட்சியமைப்பதற்கு ஆதரவு வழங்கியவுடனே விஜய் சிபிஐ மற்றும் சிபிஎம் அலுவலகங்களுக்கு சென்று அந்தக் கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி கூறினார். நேற்று முதல்-அமைச்சராக பதவியேற்ற பிறகு விஜய் பெரியார் திடலுக்கு சென்று திக தலைவர் வீரமணியை சந்தித்து பேசினார்.

இன்று முன்னாள் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. பாமக தலைவர் அன்புமணி ஆகியோரை முதல்-அமைச்சர் விஜய் சந்தித்தார். நாளை நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக ஆட்சிக்கான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் விஜய் இருக்கிறார். விசிகவை ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுக்க கோரி தவெக அழைப்பு விடுத்துள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பிறகு தவெக கூட்டணியில் விசிக இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், தமிழகத்தை அதிகமுறை ஆட்சி செய்த அதிமுக, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தொடர்ந்து பின்னடைவுகளை சந்தித்து வருகிறார்கள். 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், 2022 உள்ளாட்சி தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல், 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்துள்ளது. இந்தமுறை அதிமுக எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை. இதனால் தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுகவில் பிரசினைகள் வெடித்தன.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எதிர்ப்புகள் எழுந்துள்ளன. எடப்பாடியின் தவறான கொள்கை முடிவுகளால் தான் அதிமுக தோல்வியடைவதாக முன்னாள் அமைச்சர் வேலுமணி, சி.வி. சண்முகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் எடப்பாடியும், தவெகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோரும் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பிரச்சினை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. எம்எல்ஏவாக பதவியேற்பதற்கு கூட அதிமுகவினர் 2 அணிகளாக வந்தது சட்டசபை வெளியே பேசும்பொருளானது. வேலுமணி, சி.வி. சண்முகம் வசம் 30க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்நிலையில் அதிமுகவின் 17 எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமியை தங்களின் சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்து அவரையே தொடர சொல்லி, சட்டமன்ற செயலாளர் மற்றும் தற்காலிக சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர்.

அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி செயல்படுவார் என மனுவில் கூறப்பட்டுள்ளது

17 எம்.எல்.ஏக்களில் தளவாய் சுந்தரம், ஓ.எஸ்.மணியன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மரகம் குமரவேல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதிமுக எம்.எல்.ஏக்கள் 47 பேரில் இதுவரை 17 பேர் மட்டுமே பழனிசாமிக்கு ஆதரவாக மனு அளித்து உள்ளனர்.

மீதமுள்ள எம்எல்ஏக்கள் வேலுமணியை அதிமுக சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்ய சொல்லி சட்டமன்ற செயலாளரை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சட்டசபை முடிந்து வெளியே வந்த ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், அதிமுக தலைமை எடப்பாடி பழனிசாமிதான், அதிமுகவை உடைக்க முயற்சி நடக்கவில்லை என்றார்.

முன்னதாக அதிமுக உடைகிறதா? என்ற கேள்விக்கு தவறான தகவல் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துவிட்டு சென்றார்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் 47 எம்.எல்.ஏக்கள் அதிமுக சார்பில் வென்றுள்ள நிலையில், 17 எம்.எல்.ஏக்கள் சட்டசபை செயலாளரிடம் மனு அளித்துள்ளதால் அதிமுக மீண்டும் பிளவுபடுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com