ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட உதவித்தொகை ரூ.17.36 கோடி சுருட்டல்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட உதவித்தொகை ரூ.17.36 கோடியை சில அரசு அதிகாரிகள் மற்றும் 52 கல்லூரி நிர்வாகத்தினர் சுருட்டி விட்டதாக கூறப்பட்ட புகார் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிரடி விசாரணையை தொடங்கி உள்ளனர்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட உதவித்தொகை ரூ.17.36 கோடி சுருட்டல்
Published on

சென்னை,

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு 2011-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை ஒதுக்கப்பட்ட கல்வி உதவித்தொகை (ஸ்காலர்ஷிப் பணம்) ரூ.17.36 கோடியை சில அரசு அதிகாரிகளும், 52 கல்லூரி நிர்வாகத்தினரும் இணைந்து சுருட்டி விட்டதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக வக்கீல் அசோக்குமார் என்பவர் கொடுத்த புகார் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் பூர்வாங்க விசாரணை நடத்தினார்கள். பூர்வாங்க விசாரணை அடிப்படையில், இந்த புகார் தொடர்பாக சென்னை லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேணுகோபால் நேற்று முன்தினம் லஞ்சஒழிப்பு சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து அதிரடி விசாரணையை தொடங்கி உள்ளார்.

சென்னையில் 3 கல்லூரிகள்

லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ள 52 கல்லூரிகளின் பெயர் விவரங்கள் உள்ளது. அவற்றில் சென்னையைச் சேர்ந்த 3 கல்லூரிகளும் உள்ளன.

இந்த 52 கல்லூரிகளின் முதல்வர்களிடமும், புகாரில் சிக்கி உள்ள அரசு அதிகாரிகளிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி விசாரணை நடத்த உள்ளனர். விசாரணை முடிவில் கைது நடவடிக்கையும் பாயலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்பாவி ஏழை மாணவ-மாணவிகளுக்கு சேரவேண்டிய உதவித்தொகையை முறைகேடு செய்து, பகல் கொள்ளை நடந்துள்ளது பற்றி முறையாக விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று லஞ்ச ஒழிப்பு போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com