2 நாட்களில் 1,742 மதுபாட்டில்கள், ரூ.1.58 லட்சம், 3 பைக்குகள் பறிமுதல்: 53 பேர் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் சட்ட விரோதமாக மதுபானம் விற்ற குற்றத்திற்காக, 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில், மாவட்ட எஸ்.பி. பிரசண்ண குமார் தலைமையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 1,500 காவலர்களுடன் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
மாவட்டம் முழுவதும் சட்ட விரோதமாக மதுபானம் விற்கும் குற்றத்தில் ஈடுபடும் நபர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டதன்பேரில், மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை நடைபெற்றது.
கடந்த 2 நாட்களில் மட்டும் திருநெல்வேலி மாவட்டத்தில், சட்டவிரோதமாக மதுபானம் விற்ற குற்றத்திற்காக, மாவட்டம் முழுவதும் 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த குற்றத்தில் ஈடுபட்ட 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 1,742 மது பாட்டில்கள், பணம் ரூ.1 லட்சத்து 58 ஆயிரத்து 990 மற்றும் 3 பைக்குகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட எஸ்.பி. பிரசண்ண குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






