கள்ளிக்குடி அருகே 17-ம் நூற்றாண்டு சிற்பங்கள் கண்டெடுப்பு

கள்ளிக்குடி அருகே 17-ம் நூற்றாண்டை சேர்ந்த சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டது.
கள்ளிக்குடி அருகே 17-ம் நூற்றாண்டு சிற்பங்கள் கண்டெடுப்பு
Published on

திருமங்கலம்

கள்ளிக்குடி அருகே 17-ம் நூற்றாண்டை சேர்ந்த சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டது.

கள ஆய்வு

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே மாசவனத்தம் கிராமத்தில் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர்களான ஸ்ரீதர், தாமரைக்கண்ணன் ஆகியோருக்கு அவ்வூரைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் கொடுத்த தகவலின் படி கள ஆய்வு மேற்கொண்டனர். மாசவனத்தம் கிராமத்தில் பழமையான இரு சிற்பங்களை கண்டறிந்தனர். அதனை பற்றி அவர்கள் கூறியதாவது:-

இடையர் குல வீரன் சிற்பங்கள். இங்கு இரண்டு வீரக்கல் சிற்பங்களாக காணப்படுகின்றன. பொதுவாக வீரக்கல் எடுக்கும் வழக்கம் நம் முன்னோர்களிடையே பன்னெடுங்காலமாகவே இருந்து வரும் மரபாகும்.

வீரகல்லானது தொடக்க காலத்தில் ஆநிரை கவர்தலின்போது போராடி மீட்ட வீரர்களுக்கும், அதில் இறந்தவர்களுக்கும் நடுகல் எடுப்பர்.மேலும் வீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிர் துறந்தவர்களுக்கும் வீரக்கல் எடுப்பர்.

2 சிற்பங்கள்

அந்த வகையில் இங்கு காணப்படும் சிற்பமானது 3 அடி உயரமும் இரண்டடி அகலமும் கொண்ட பலகைக்கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு ஆண் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு வீரன் வலது புறம் சரிந்த கொண்டையுடனும், நீண்ட காதுகளில் காதணியும், இருகரங்களில் இடது கரத்தில் ஒரு தடியை பிடித்த படியும், அந்த தடியை ஒரு மாட்டின் தலையில் வைத்த படியும், மார்பில் ஆபரணங்களும், இடையில் ஆடையும் செதுக்கப்பட்டுள்ளது. கால்களில் தண்டையும் அணிந்தபடி நின்ற கோலத்தில் கம்பீரமாக வடிக்கப்பட்டுள்ளது. இதில் மற்றொரு வீரனின் சிற்பமானது வலது கையில் குத்தீட்டியை பிடித்த படியும், இடது கையில் வாளினை கீழே ஊன்றிய படியும், இடது புறம் சரிந்த கொண்டையும், மார்பில் ஆபரணமும், இடையில் இடைக்கச்சையும், கால்களில் தண்டை அணிந்தபடி நின்ற கோலத்தில் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வீரனின் தலைக்கு இடதுபுறம் ஒரு சங்கு செதுக்கப்பட்டுள்ளது.

இச்சிற்பத்தில் தடி, வாள், குத்தீட்டி மற்றும் மாடு போன்றவற்றை வைத்துப் பார்க்கும்போது இவர்கள் இடையர் குலத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதலாம். இவர்கள் ஆநிரை மீட்டல் போரில் கலந்து உயிர் துறந்து இருக்கலாம். அதன் நினைவாக நடுகல் எடுத்திருக்கலாம். சிற்பங்களில் வடிவமைப்பை வைத்து பார்க்கும் போது நாயக்கர் காலத்தைச் சேர்ந்ததாகவும் 17-ம் நூற்றாண்டை சேர்ந்ததாகவும் கருதலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com