18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு 3-வது நீதிபதி முன்னிலையில் இன்று விசாரணை தொடங்குகிறது

எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், தங்கதமிழ்செல்வன் உள்பட 18 பேர் கடந்த ஆண்டு கவர்னரிடம் மனு கொடுத்தனர்.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு 3-வது நீதிபதி முன்னிலையில் இன்று விசாரணை தொடங்குகிறது
Published on

சென்னை,

இதைத்தொடர்ந்து அவர்கள் 18 பேரையும் தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் கடந்த 18.9.2017 அன்று உத்தரவிட்டார். இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, எம்.சுந்தர் ஆகியோர் விசாரித்தனர். கடந்த மாதம் 14-ந் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

18 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று தலைமை நீதிபதியும், செல்லாது என்று நீதிபதி எம்.சுந்தரும் தீர்ப்பு கூறினர். மாறுபட்ட இந்த தீர்ப்பால் வழக்கு 3-வது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. அதன்படி, இந்த வழக்கை விசாரிக்க 3-வது நீதிபதியாக எஸ்.விமலா நியமிக்கப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த வழக்கை வேறு மாநில ஐகோர்ட்டு அல்லது சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றக்கோரியும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, 3-வது நீதிபதியாக எம்.சத்தியநாராயணனை நியமித்து உத்தரவிட்டது. இந்தநிலையில் கடந்த 4-ந் தேதி அந்த வழக்கை நீதிபதி சத்தியநாராயணன் விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். அப்போது சபாநாயகர் மற்றும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் வக்கீல்கள் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நீதிபதி, 23-ந் தேதி(அதாவது இன்று) முதல் 27-ந் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் இந்த வழக்கின் விசாரணை நடைபெறும் என்றும், 23-ந் தேதி இந்த வழக்கு முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அறிவித்தார்.

அதன்படி, இந்த வழக்கின் விசாரணை 3-வது நீதிபதியாக நியமிக்கப்பட்ட எம்.சத்தியநாராயணன் முன்னிலையில் இன்று(23-ந் தேதி) தொடங்குகிறது. இந்த வழக்கில் சபாநாயகர் மற்றும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டின் மூத்த வக்கீல்கள் ஆஜராகி வாதாடுகின்றனர்.

சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து மறுநாளே(2017-ம் ஆண்டு செப்டம்பர் 19-ந் தேதி) தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். தலைமை நீதிபதி முன்னிலையில் இந்த வழக்கின் விசாரணை 4 மாதங்கள் நடைபெற்றது. கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதன்பின்பு, 4 மாதங்களுக்கு பின்பு கடந்த மாதம் 14-ந் தேதி தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தீர்ப்பு கூறியது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இருதரப்பு வக்கீல்களும் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைத்துள்ளதாலும், தங்கள் தரப்பு ஆவணங்கள் மற்றும் ஆதரவான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு நகல்களை தாக்கல் செய்துள்ளதாலும் வழக்கின் விசாரணை விரைவாக முடிவடைய வாய்ப்பு உள்ளது. இருதரப்பு வக்கீல்களும் தங்கள் தரப்புக்கு ஆதரவான கூடுதல் ஆவணங்கள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள் இருந்தால் அதை தாக்கல் செய்து அதுதொடர்பாக விவாதம் நடத்த வேண்டியது மட்டுமே இருக்கும். இதன்காரணமாக ஏற்கனவே தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வின் போது விசாரணைக்காக எடுத்துக்கொண்டது போன்று 3-வது நீதிபதி விசாரணைக்கு கால அளவு தேவைப்படாது என்று ஐகோர்ட்டு வக்கீல் ஒய்.கிருஷ்ணன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com