இந்திய கடற்படையின் அரக்கோணம் ஹெலிகாப்டர் பயிற்சி பள்ளியில் இருந்து 18 பைலட்டுகள் தேர்ச்சி

இந்திய கடற்படையின் 561-வது ஏர் ஸ்குவாட்ரன் இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து கடற்படை பைலட்டுகளின் பயிற்சி கூடமாக திகழ்கிறது.
image courtesy: ANI
image courtesy: ANI
Published on

அரக்கோணத்தில் உள்ள ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை தளத்தில் இன்று நடைபெற்ற கண்கவர் பயிற்சி நிறைவு அணிவகுப்பில் 18 பேர் ஹெலிகாப்டர் பைலட்டுகளாக கடற்படையில் இணைந்தனர். அவர்களில் சப் லெப்டினன்ட் சித்தி ஹேமந்த் துபே என்னும் ஒரு பெண் அதிகாரியும் அடங்குவார். அவர் இந்திய கடற்படையில் ஹெலிகாப்டர் பைலட்டாக இணையும் இரண்டாவது அதிகாரி ஆவார்.

ஐ.என்.எஸ். ராஜாளியில் உள்ள இந்திய கடற்படை ஏர் ஸ்குவாட்ரன் 561-ன் கீழ் செயல்படும் ஹெலிகாப்டர் பயிற்சி பள்ளியில் அவர்கள் கடந்த 22 வாரங்களாக நடைபெற்ற பறத்தல் மற்றும் தரைநிலை பயிற்சிகளை முடித்து பைலட்டுகளாக கடற்படையில் இணைந்துள்ளார்கள். அதற்கான கோல்டன் விங்ஸ் விருதுகளை அவர்களுக்கு கடற்படையின் கிழக்கு பிராந்திய தளபதி வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் அணிவித்து கவுரவித்தார்.

இப்பைலட்டுகள் இந்திய கடற்படையின் பல்வேறு பிரிவுகளில் கண்காணிப்பு, ரோந்து, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள், கடற்கொள்ளைக்கு எதிரான நடவடிக்கை போன்ற பல்வகை பணிகளில் ஈடுபட உள்ளார்கள். நிகழ்ச்சியில் பேசிய வைஸ் அட்மிரல் பெந்தார்கர் கூறியதாவது:-

இந்திய கடற்படையில் இன்று 18 இளைஞர்கள் பைலட்டுகளாக இணைந்துள்ளார்கள். அவர்கள் எவ்வாறு பறப்பது என்பது பற்றி மட்டுமல்லாமல் எந்த இலக்குடன் செயல்படுவது என்பது பற்றியும் கற்று அறிந்துள்ளார்கள். கடலிலும் வானிலும் துல்லியமாக இயங்குதல் பைலட்டுகளுக்கு அவசியம்; அதற்கான திறனை அவர்கள் தொடர்ந்து பேணவேண்டும். அவர்கள் அணிந்துள்ள விங்ஸ் ஆப் கோல்ட் விருது ஒரு பதக்கம் மட்டுமல்ல, அது அவர்களது கட்டுப்பாடு, இலக்கு ஆகியவற்றின் சின்னம். இந்த விருது பல்வேறு பொறுப்புகளை சுமந்து வருகிறது. இந்த இளம் பைலட்டுகள் வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்திய கடற்படையின் பெருமையில் பங்கேற்கிறார்கள்.

இந்திய கடற்படையின் வான் பிரிவு துல்லியமான செயல்பாட்டுடனும் பெருமையுடனும் தனித்துவத்துடன் செயல்படுகிறது. கப்பல்களின் தளத்திலிருந்தும், கடற்படை தளங்களில் இருந்தும் விவேகமாக செயல்படும் திறனை அவர்கள் பெற்றுள்ளார்கள். கடற்படையின் முக்கிய நடவடிக்கைகள், பிற நாடுகளுடனான கூட்டு கடற்படை பயிற்சி, தேடுதல் மற்றும் மீட்பு பணிகள், மனிதாபிமான உதவிகள் போன்ற அனைத்து பணிகளிலும் அவர்கள் சிறப்பாக செயல்பட்டு உள்ளார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

அரக்கோணத்தில் உள்ள இந்திய கடற்படையின் 561-வது ஏர் ஸ்குவாட்ரன் இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து கடற்படை பைலட்டுகளின் பயிற்சி கூடமாக திகழ்கிறது. கடற்படை மட்டுமின்றி இந்திய கடலோர காவல் படை மற்றும் பல்வேறு நட்பு நாடுகளின் அதிகாரிகளும் இங்கு ஹெலிகாப்டர் பைலட் பயிற்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com