தமிழக மீனவர்கள் 18 பேர் விடுதலை..

மீனவர்கள் மீது மன்னார் மீன்வளத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக மீனவர்கள் 18 பேர் விடுதலை..
Published on

சென்னை,

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்குவாடி துறைமுக கடல் பகுதியில் இருந்து கடந்த 17-ம் தேதி மன்னார் வளைகுடாவுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க சென்று இருந்தனர். இதில் 2 விசைப்படகுகள் மற்றும் 18 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் சிறைபிடித்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 18 மீனவர்கள் இலங்கையின் மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 18 மீனவர்களையும் 31-ந் தேதி (இன்று) வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தினர்.

இந்த நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 18 மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீனவர்கள் மீது மன்னார் மீன்வளத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2 விசைப்படகுகள் மீதான வழக்கு விசாரணை மார்ச் 20-ம் தேதி நடைபெறும் என்று மன்னார் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஓரிரு நாட்களில் தமிழகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com