கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் அனைவரும் விடுதலை: நீதிமன்றம் தீர்ப்பு

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் அனைவரும் விடுதலை: நீதிமன்றம் தீர்ப்பு
Published on

கோபிச்செட்டிப்பாளையம்,

ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த தொட்டகாஜனூரில் உள்ள பண்ணை வீட்டில் 2000 ஜூலை 30-ம் தேதி இரவு தனது மனைவி பர்வதம்மாளுடன் ராஜ்குமார் தங்கியிருந்தபோது, சந்தனக் கடத்தல் வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகளால் கடத்தப்பட்டார். இதுதொடர்பாக தாளவாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கு கோவை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டது.

தூதுவர்கள் மூலம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து 108 நாட்களுக்கு பிறகு நடிகர் ராஜ்குமாரை, வீரப்பன் விடுவித்தார். இந்த வழக்கில், வீரப்பன், அவருடைய நண்பர்கள் சேத்துக்குளி கோவிந்தன், சந்திர கவுடா, மல்லு, மாறன், கோவிந்த ராஜ் என்கிற இனியன், அன்றில் என்கிற ஏழுமலை, செல்வம் என்கிற சத்தியா, அமிர்தலிங்கம், பசுவண்ணா, நாகராஜ், புட்டுசாமி, கல் மண்டிராமா, ரமேஷ் ஆகிய 14 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இதில் வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், சந்திர கவுடா ஆகியோர் போலீஸாரால் என்கவுன்டர் செய்யப்பட்டனர். மல்லு என்பவர் இறந்து விட்டார். ரமேஷ் தலைமறைவாக உள்ளார்.

இவ்வழக்கின் விசாரணை கோபி கூடுதல் மாவட்ட 3-வது அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாள் உட்பட மொத்தம் 42 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். 52 ஆவணங்கள், துப்பாக்கி உள்ளிட்ட 31 பொருட் களை சிபிசிஐடி போலீஸார் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

கடந்த 18 வருடமாக விசாரணை நடைபெற்ற நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காவல்துறை போதிய ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை எனவும் குற்றத்தை நிரூபிக்கும் வகையில் சாட்சியங்கள் இல்லை எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com