

திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள சேவூரில், அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 1,800 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் 2 மண்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, அந்தப் பகுதியில் மேலும் பல இடங்களில் தொல்லியல் ஆய்வு நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
கொங்கு மண்டலத்தின் தொன்மையான வரலாற்றைக் கொண்ட அவினாசி பகுதியில், அவ்வப்போது பழங்கால நடுகற்கள், முதுமக்கள் தாழிகள் உள்ளிட்ட தொல்லியல் சான்றுகள் கிடைத்து வருகின்றன.
இந்த நிலையில், சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாணவர்கள் கபடி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு மாணவரின் காலில் மண் ஓடு போன்ற பொருள் தட்டுப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்தப் பகுதியைத் தோண்டிப் பார்த்தபோது, அங்கு மண்பாண்டம் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து திருப்பூர் தொல்லியல் துறை அலுவலர் ஜெயபிரியா, பொறுப்பாளர் சுந்தரகணேஷ் ஆகியோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மண்ணைத் தோண்டிப் பார்த்தபோது, மேலும் ஒரு மண்பாண்டம் கிடைத்தது.
கண்டெடுக்கப்பட்ட 2 மண்பாண்டங்களும் கலைநயத்துடன் செய்யப்பட்டிருந்தன. இவை சுமார் 1,800 ஆண்டுகள் பழமையானவையாக இருக்கலாம் எனத் தொல்லியல் துறையினர் கருதுகின்றனர்.
மேலும், முன்னோர்கள் உயிரிழந்தவர்களின் நினைவாகவும் அடையாளமாகவும் பயன்படுத்திய கலயங்களாக இவை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அக்காலத்தில் இறந்தவர்களுடன் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் உணவு தானியங்களை மண்பாண்டங்களில் வைத்து புதைக்கும் வழக்கம் இருந்துள்ளது.
எனவே, தற்போது கிடைத்துள்ள மண்பாண்டங்கள், இப்பகுதியில் பண்டைய கால மக்கள் வாழ்ந்ததற்கான முக்கியச் சான்றுகளாகக் கருதப்படுகின்றன.
சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 5-க்கும் மேற்பட்ட இடங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. அந்த இடங்களிலும் மண்ணைத் தோண்டி ஆய்வு மேற்கொள்ள தொல்லியல் துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் அப்பகுதியின் பழங்கால வரலாறு குறித்த கூடுதல் தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
பண்டைய காலத்தில் சேவூர் தங்கக் காசுகள் அச்சடிக்கப்பட்ட இடமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், பள்ளிக்கு அருகில் 1,000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான அறம்வளர்த்த நாயகி உடனமர் வாலீஸ்வரர் கோவில், கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவில் ஆகியவை அமைந்துள்ளன.
இந்தக் கோவில்களில் சுரங்கப்பாதைகள் இருந்ததாகவும், அவற்றின் வழியாக அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்குச் செல்ல முடியும் என்றும் முன்னோர்கள் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால், சேவூர் பகுதியில் தற்போது கிடைத்துள்ள மண்பாண்டங்கள் உள்ளிட்ட தொல்லியல் தடயங்களை விரிவாக ஆய்வு செய்து, அப்பகுதியின் வரலாற்றை வெளிக்கொணர வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.